பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தன்சானியாவும் இந்தியாவும் ஆராய்வு

1 Min Read

பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தன்சானியாவும் இந்தியாவும் கவனம் செலுத்தியுள்ளன. இது தொடர்பில் இந்திய, தன்சானிய உயரதிகாரிகள் மட்டக் கூட்டம் தன்சானியாவின் தலைநகர் தார் அல் சலாமில் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் ஜனேஷ் கெய்ன், தன்சானியாவின் வெளியுறவு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஒத்துழைப்பு அமைச்சின் ஆசிய, அவுஸ்திரேலிய பிரிவு பணிப்பாளர் ஃபெலிஸ்டர் ருகம்ப்வா ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கலாசாரம் மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகிய விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த தன்சானியாவின் தன்னாட்சிப் பிராந்தியமான சன்ஸிபாரின் ஜனாதிபதியும் புரட்சிகர மன்றத்தின் தலைவருமான ஹுசைன் அலி மவின்யி, இந்திய உப ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சமயம் நீலப் பொருளாதாரம், சுற்றுலா, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *