நாட்டில் இந்த ஆண்டின் நேற்றுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் இதுவரை 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இறப்பு வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் 29,964 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,157 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.
மொத்த டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இங்கு 50,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாகாணத்தில் 13,886 பேரும், மத்திய மாகாணத்தில் 8,710 பேரும் பதிவாகியுள்ளனர்.மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இது நாட்டின் மொத்த நோயாளர்களில் 21.31 சதவீதமாகும். கொழும்பு மாவட்டத்தில் 18,914 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,977 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்றி நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




