அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை 79 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த சபாநாயகர், 2026 ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலான அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட 09 மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம்,“22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 2026 ஆகஸ்ட் 21 திகதியன்று மனுக்கள் ஏழு, 2026 ஆகஸ்ட் 24 திகதியன்று மனுக்கள் நான்கு, 2026 ஆகஸ்ட் 25 திகதியன்று மனுக்கள் எட்டு, 2026 ஆகஸ்ட் 28 திகதியன்று மனுக்கள் ஐந்து, 2026 ஆகஸ்ட் 31 திகதியன்று மனுக்கள் முப்பத்து ஒன்று, 2026 செப்டம்பர் 01 திகதியன்று மனுக்கள் பத்து, 2026 செப்டம்பர் 03 திகதியன்று மனுக்கள் மூன்று, 2026 செப்டம்பர் 04 திகதியன்று மனுக்கள் இரண்டு, கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




