அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களும் அடங்கிய முழு அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, எதிர்த்தரப்பு மனுதாரர்கள் முழு அமர்வு முன்னிலையில் இந்த மனுக்களை விசாரிக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.இந்த கோரிக்கையையே உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
எதிர் மனுதாரர் ஒருவருக்காக முன்னிலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், குறித்த மனுக்களை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைத்து நீதியரசர்களும் அடங்கிய அமர்வுக்கு மாற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெஃப்ரி அல்கரத்னம், எராஜ் டி சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அனுர மெதகொட மற்றும் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பல சட்டத்தரணிகளும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன, நீதியரசர்கள் அமர்வின் எண்ணிக்கையையும் அதன் கட்டமைப்பையும் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.அரசியலமைப்பின் 132(3) ஆவது உறுப்புரையை மேற்கோள் காட்டிய அவர், ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெறும் நீதியரசர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசரின் விருப்புரிமைக்கு உட்பட்டது எனத் தெரிவித்தார். மேலும், இடையீட்டு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நைகல் ஹெட்ச் உள்ளிட்ட சட்டத்தரணிகளும், நீதியரசர்கள் அமர்வின் கட்டமைப்பை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கே உள்ளதாக வாதங்களை முன்வைத்தனர். சகல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் விடயங்களை பரிசீலித்த பின்னர், மனுக்களை முழு நீதியரசர்கள் அமர்வுக்கு மாற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு, தற்போதுள்ள அமர்வு முன்னிலையிலேயே மனுக்களின் விசாரணையை தொடர தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள், ஐவர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் நேற்றுமுதல் ஆரம்பமாகின.




