அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமா அல்லது மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்குமென,அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னர், இது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு நாட்டில் தற்போது பேசு பொருளாகவுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுபற்றி விளக்கிய அமைச்சர்;
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமா அல்லது மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பால் எதுவும் செய்ய முடியாது.
எதிர்க்கட்சியினரோ, ஆளும் கட்சியினரோ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ கோரிக்கை விடுத்தாலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்றி சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
நேற்று முதல் மூன்று வார கால அவகாசம் உச்ச நீதிமன்றத்திற்கிருந்தது. இந்த காலப்பகுதிக்குள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்து, நீதிமன்றம் தமது இறுதித் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும். சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும், தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




