அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–1 என சமன் செய்த பங்களாதேஷ் அணி ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அதிரடியாக மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டதை அடுத்து இலங்கை அணி ஓர் இடம் சரிந்து 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டார்வினில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில் பங்களாதேஷ் அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாகவே 9ஆவது இடத்தைத் தாண்டி முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி அந்த அணி 9 ஆவது இடத்தில் இருந்து முன்னேறி தற்போது ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அத்துடன் உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலிலும் பங்களாதேஷ் அணி நான்காவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
பங்களாதேஷ் அணியின் ஏற்றத்தை அடுத்து டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த இலங்கை 7 ஆவது இடத்திற்கு சரிந்ததோடு பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு இடம் பின்தங்கி முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளன.




