பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை இரண்டு நாட்களுக்குள் இன்னிங்ஸால் வென்று டார்வினில் முதலாவது டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு அவுஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்துள்ளது.
மக்கெவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் 64 மற்றும் 95 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிஸில் பெற்ற 210 ஓட்டங்கள் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இரண்டாவது நாளான நேற்று (23) முடிவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது மிகக் குறுகிய டெஸ்ட் போட்டியாக இருந்தது. அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் பங்களாதேஷ் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 100க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது. அத்துடன் அவுஸ்திரேலியாவின் 210 ஓட்டங்களும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸால் வெற்றியீட்டிய நான்காவது மிகக் குறைந்த ஓட்டங்களாக அமைந்தது.
இதன்போது அதிரடியாக பந்துவீசிய மிட்சல் ஸ்டாக் முதல் இன்னிங்ஸிர் 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1–1 என சமநிலை பெற்றது.




