இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் கால்பந்து தொடரில் அப்கன்ட்ரி லயன்ஸ் அணி, நியூ யங்ஸ் கால்பந்து கழகத்தை 6–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தோல்வியுறாத அணியாக தனது ஆறாவது வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியுடன் 10 அணிகள் பங்கேற்றிருக்கும் தொடரில் அப்கன்ட்ரி லயன் 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதோடு தோல்வி அடைந்த நியூ கங்ஸ் 2 புள்ளிகளை மாத்திரம் பெற்றிருக்கும் நிலையில் 9 ஆவது இடத்திற்கு சரிந்தது.
கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற இந்தப் போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே கோல் புகுத்த ஆரம்பித்த அப்கன்ட்ரி லயன்ஸ் முதல் பாதியிலேயே 5–0 என முன்னிலை பெற்றது. மொஹமட் இஷான் (33), மொஹமட் அகீல் (36), மொஹமட் அசாத் (43) மற்றும் மொஹமட் ஆகிப் (45–3) ஆகியோரும் கோல் பெற்றனர்.
இந்நிலையின் இரண்டாவது பாதியில் 61 ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் அப்கன்ட்ரி சார்பில் மற்றும் ஒரு கோலை பெற்றார்.
இதேவேளை இந்தத் தொடரின் ஆறாவது வாரத்தை ஆரம்பித்து நடைபெற்ற ரட்னம் அணிக்கு எதிரான போட்டியில் டிபென்டர்ஸ் கால்பந்து கழகம் தனது முதல் வெற்றியை பெற்றது. இதன்போது டிபென்டர்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. ஷிபான் கலீல் இரட்டை கோல் புகுத்தினார்.
இதன்படி ரட்னம் அணி இதுவரை ஆடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து கடைசி இடத்தில் உள்ளது.




