தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரரான இலங்கையின் யுபும் அபேகோன் தடகள போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறித்துள்ளார்.
100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் ஓடிய முதல் தெற்காசிய வீரராக சாதனை படைத்த 31 வயது யுபுன், நேற்று (21) வெளியிட்ட உருக்கமான அறிவிப்பு ஒன்றில் தனது ஓய்வு பற்றி குறிப்பிட்டார்.
எந்தவித வருத்தமும் இன்றி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்ட அவர், தனது நாட்டிற்கு இனி செலுத்த வேண்டிய கடன் எதுவும் இல்லை என்றும், ஆனால் தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் கிடைத்த ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்காக எப்போதும் ஆழ்ந்த நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அபேகோன் 2022 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தை 9.96 வினாடிகளில் நிறைவு செய்திருந்தார்.
இதன்மூலமே அவர் 10 விநாடிகளுக்குள் போட்டியை நிறைவு செய்த முதலாவது மற்றும் ஒரே தெற்காசிய வீரராக சாதனை படைத்தார். அதே ஆண்டின் பிற்பகுதியில் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாக விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அபேகோன் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 32 ஆண்டுகளின் பின்னர் பங்கேற்ற முதல் தெற்காசிய வீரராகவும் பதிவானார்.




