அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி முடிவுற்ற பின்னர் ஆர்ஜன்டீன மற்றும் ஸ்பெயன் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இலங்கை நேரப்படி கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. எனினும் போட்டி நிறைவுக்கான இறுதி விசிலை நடுவர் ஊதிய பின்னர் ஆர்ஜன்டீன மற்றும் ஸ்பெயின் வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் அருவருக்கத்தக்க வகையில் பல வீரர்களும் மோதலில் ஈடுபட்டது தொடர்பில் ஒழுக்காற்றுக் குழு போட்டி அறிக்கையை மதிப்பீடு செய்யும் என்று பிஃபா தெரிவித்துள்ளது. ‘போட்டிக்குப் பிந்தைய சம்பவங்களில் பிஃபா ஒழுங்கு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த, பிஃபா ஒழுக்காற்றுக் குழு ஒரு ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை விசாரணை அதிகாரியை நியமித்துள்ளது’ என்று பிஃபா குறிப்பிட்டுள்ளது.
போட்டி முடிந்த கையோடு ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தபோதே ஆர்ஜன்டீன வீரர்கள் சிலர் எதிரணி வீரர்களை உடல் ரீதியில் தாக்க ஆரம்பித்தது வீடியோ பதிவுகளில் தெரிகிறது.
அர்ஜன்டீன பின்கள வீரர் லியாண்ட்ரோ பாரேடஸ், ஸ்பெயினின் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். இதன்போது தலையிட்ட ஸ்பெயின் மாற்று வீரர் கவியையும், பாரேடஸ் தரையில் விழுமாறு பலமாகத் தள்ளினார்.
2022 உலகக் கிண்ண சாம்பியன்களான அர்ஜன்டீனாவின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, பாரேடஸை அந்த இரு ஸ்பெயின் வீரர்களிடமிருந்து பிரித்தார். இருப்பினும், அர்ஜன்டீனாவின் 5ஆம் இலக்க ஜெர்சி அணிந்திருந்த பாரேடஸ், மேலும் சில ஸ்பெயின் வீரர்களைத் தள்ள முயன்றார். இறுதியில், அவரது அணித்தோழர் ஒருவர் உடலால் தடுத்து அவரை பின்னுக்கு இழுத்துச் சென்றார். ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி முடிவில் ஆர்ஜன்டீன வீரர், ஆர்ஜன்டீன கடற்கரைக்கு அப்பால் இருக்கும் இங்கிலாந்து நிர்வாகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போக்லன்ட் தீவு தொடர்பான பாதாதைகளை மைதானத்தில் காண்பித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிஃபா அறிவித்துள்ளது.




