இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் கால்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் ஜூலை 25, 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடத்துவதற்கு ஏற்பர்டுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலுமிருந்து 25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில், சுமார் 1,200 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கான போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் கே.டி.சி. காமினி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (20) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய மட்டத்திலான இப்போட்டித் தொடர் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விடயம் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், இதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதார மற்றும் சேவைத் துறைகளும் பயனடையும் எனக் குறிப்பிட்டார்.
கடந்த வருட தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணி முதலாம் இடத்தையும், ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்ததோடு, இவ்வருட தேசிய கபடி போட்டியில் பெண்கள் அணி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




