இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரில் நடப்புச் சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் அணிக்கு எதிராக அப்கன்ட்ரி லயன்ஸ் கோல் மழை பொழிந்ததோடு ரட்னமுக்கு எதிராக ரினோன் அணி இலகு வெற்றியீட்டியது.
கொழும்பு, சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற புளூ ஸ்டாருக்கு எதிரான ஆட்டத்தில் அப்கன்ட்ரி லயன்ஸ் முதல் பாதியிலேயே 6 – 1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் அதன் ஆதிக்கம் தொடர்ந்ததோடு போட்டி முடிவில் 9–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
முன்கள வீரர் பென்ஜமின் யோர் ஹட்ரிக் கோல் புகுத்தியதோடு மொஹமட் இஷான் மற்றும் எம். ஆகிப் ஆகியோர் இரட்டை கோல்களைப் பெற்றனர்.
முன்னதாக, 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரை ஆரம்பித்து கடந்த வாரம் நடைபெற்ற நியூ யங்ஸ்–புளூ ஈகல்ஸ் (1–1) மற்றும் டிபென்டர்ஸ்–கொழும்பு கா.க. (0–0) அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் சமநிலை பெற்ற நிலையில் தொடரில் முதல் வெற்றியை பெற்ற அப்கன்ட்ரி லயன்ஸ் அதிக கோல் வித்தியாசத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றது.
இதேவேளை இந்த வாரத்திற்கான கடைசி போட்டியாக நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பின் பலம் வாய்ந்த இரு அணிகளான ரெனோன் மற்றும் ரட்னம் அணிகள் மோதின. இதன் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் புகுத்தாதபோதும் இரண்டாவது பாதியில் ரினோன் மூன்று கோல்களைப் பெற்று வெற்றியீட்டியது.




