ஸ்பெயினுடனான இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா தகுதி

2 Min Read

கடைசி ஏழு நிமிடங்களுக்குள் புகுத்திய பரப்பான இரட்டை கோல்கள் மூலம் இங்கிலாந்து அணியை 2–1 என்ற கோல்களால் வீழ்த்திய நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா ஸ்பெயினுக்கு எதிரான பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட தகுதி பெற்றது.

1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் வந்த இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் முன்னிலை பெற்றபோதும் ஆர்ஜன்டீனா கடைசி நிமிடங்களில் மேற்கொண்ட தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இதன்படி நியூயோர் நியூ ஜெர்சி அரங்களில் இலங்கை நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவு தாண்டி திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் அணியும் தென் அமெரிக்க சம்பியனான ஆர்ஜன்டீனாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதற்கு முன்னதாக இம்முறை உலகக் கிண்ணத்தின் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மியாமியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அட்லாண்டாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் முயற்சியில் தள்ளுமுள்ளில் ஈடுபட்டபோதும் எந்த கோலும் பெறப்படவில்லை. ஆனால் ஆர்ஜன்டீனா 12 பௌல்களையும், இங்கிலாந்து 7 பௌல்களையும் செய்திருந்தன.

இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. இரண்டாவது பாதியின் 10 ஆவது நிமிடத்திலேயே இங்கிலாந்து கோல் எண்ணிக்கையை ஆரம்பித்தது. மோர்கன் ரொஜர்ஸ் பரிமாற்றிய பந்தை அன்தோனி கோர்டன் கோலா மாற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி போட்டியின் கடைசி தருணம் வரை முன்னிலையை தக்கவைக்க முடிந்தது.

எவ்வாறாயினும் லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி வழக்கம்போல் கடைசி நிமிடங்களில் தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் 85ஆவது நிமிடத்தில் தூரத்திலிருந்து வந்த பந்தை மெஸ்ஸி இங்கிலாந்து கோல் பெட்டிக்கு சற்று வெளியே கட்டுப்படுத்தி அங்கு தடுப்பு வீரர் யாருமில்லாது இருந்த என்சோ பெர்னாண்டஸுக்கு அடிக்க அவர், 20 அடி தொலைவில் இருந்து கோல் கம்பத்திற்குள் புகுத்தினார்.

இதற்கு பின்னரும் இங்கிலாந்து தற்காப்பு ஆட்டத்தில் வெளிப்பட்ட பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட ஆர்ஜன்டீனா 92 ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை புகுத்தியது. மீண்டும் செயற்பட்ட மெஸ்ஸி துல்லியமாகச் செய்த பந்து பரிமாற்றத்தின் மூலம் லௌடாரோ மாடினர் அந்த கோலை பெற்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *