நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (15) நள்ளிரவு கடந்து நாளை அதிகாலை 12.30 மணிக்கு அமெரிக்காவின் அட்லாண்டா அரங்கில் நடைபெறவுள்ளது.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணி நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் உறுதியுடன் இதுவரை தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறி இருப்பதோடு ஹரி கேன் தலைமையில் ஆடும் இங்கிலாந்து இம்முறை உலகக் கிண்ணத்தில் வலுவான் ஆட்டத்தை வெளிப்படுத்தியே அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த அணிகள் சந்திக்கும் ஆட்டங்கள் எப்போதும் பரபரப்பாக அமைவதோடு அதன் உச்சமாக 1986 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் டியாகோ மரடோனா கையால் கோல் அடித்து இங்கிலாந்தை வீழ்த்தியதை குறிப்பிடலாம். இந்நிலையில் 24 ஆண்டுகளின் பின்னரே இங்கிலாந்து மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் உலகக் கிண்ணத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆர்ஜன்டீன அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் சற்று தடுமாற்றத்துடனேயே அரையிறுதி வரை முன்னேறியது. அந்த அணி ஆரம்ப சுற்றில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து நடந்த மூன்று நொக் அவுட் சுற்றுப் போட்டிகளிலும் போராட்டத்துடனேயே அரையிறுதி வரை முன்னேற முடிந்தது. அதிலும் எகிப்துக்கு எதிரான 16 அணிகள் சுற்று பெரும் சர்ச்சைகளுடன் முடிந்ததோடு காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 120 நிமிடங்கள் ஆடியே வீழ்த்த முடிந்தது.
இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக எட்டு கோல்களைப் பெற்றிருக்கும் 39 வயது லியோனல் மெஸ்ஸியே ஆர்ஜன்டீயன அணியின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளார். அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை ஆர்ஜன்டீனாவுக்கு சாதகமாக மாற்றுவார் என்ற நம்பிக்கையே அந்த அணிக்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது.
குறிப்பாக போட்டியின் இறுதிக் கட்டங்களில் ஆர்ஜன்டீன அணியின் தாக்குதல் ஆட்டம் அந்த அணிக்கு இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றிகளை தேடித் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறும் இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் நேர்த்தியான மற்றும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனினும் மெக்சிகோவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் வியக்கும் வகையில் ஆடிய இங்கிலாந்து நோர்வேயுடன் காலிறுதிப் போட்டியில் ஒழுங்கற்று தடுமாறியதாக விமர்சனங்கள் உள்ளன.
32 வயது அனுபவ வீரர் கேன் மற்றும் 23 வயது சக தாக்குதல் ஆட்டக்காரர் ஜூட் பெலிங்கம் இருவருமே இங்கிலாந்து அணியின் திருப்பம் தரக்கூடியவர்களாக உள்ளனர். இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி புகுத்திய மொத்தம் 13 கோல்களில் இந்த இருவரும் 12 கோல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இதுவரை ஆறு கோல்களை பெற்றிருக்கும் கேன் தனது பெரும்பாலான கோல்களை ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பெற்றதோடு நொக் அவுட் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பெலிங்கமும் ஆறு கோல்களை புகுத்தியுள்ளார். எனவே, ஆர்ஜன்டீன அணி உலகக் கிண்ணத்தை தக்கவைப்பதாயின் இந்த இரு வீரர்களையும் தடுப்பது கட்டாயமாக அமையும்.
இங்கிலாந்து மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் இதுவரை 14 தடவைகள் எதிர்கொண்டுள்ளன. அதில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் வென்றிருப்பதோடு ஆர்ஜன்டீனா ஆறில் வெற்றியீட்டியுள்ளது. ஐந்து போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.
கடைசியாக இந்த இரு அணிகளும் 2005 ஆம் ஆண்டிலேயே நட்புறவு போட்டி ஒன்றில் ஆடின அதில் இங்கிலாந்து 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் இதுவரை ஐந்து முறை பலப்பரீட்சை நடத்தி இருப்பதோடு அதில் இங்கிலாந்து மூன்று முறையும் ஆர்ஜன்டீனா அணி இரு முறையும் வெற்றியீட்டியுள்ளது.




