முல்லைத்தீவு மாவட்டத்திற்கு புதியதொரு விளையாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரதான விளையாட்டு மைதானங்களை புனரமைத்து தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (11) முல்லைத்தீவில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்த பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கற்கள் நட்டு வைக்கப்பட்டன.
தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களுக்காக உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஓட்ட தடங்கள் மற்றும் நவீன தடகள வசதிகளுடன் இம்மைதானங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை என்பது தெற்கைப் போன்றே வடக்கு மக்களுக்கும் சமமாக உரித்தாக்கப்பட வேண்டும்’ என்றும், விளையாட்டுத் துறை இனி கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது என்றும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.




