சனுஜ விக்குனகொடவின் இரட்டைச் சதத்தின் மூலம் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி வலுவான நிலையை பெற்றுள்ளது.
காலியில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 3 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும் முதல் வரிசையில் வந்த சனுஜ விக்குனகொட அபாரமாக செயற்பட்டார். நேற்றை நாள் ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்த அவர் 227 பந்துகளில் 31 பௌண்டரிகளுடன் 203 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்போது விக்குனகொட பௌண்டரிகளால் மாத்திரம் 124 ஓட்டங்களைப் பெற்று இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பௌண்டரி அல்லது சிக்ஸர் மூலம் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக சாதனை படைத்தார். இதன்போது அவர் 2009 இல் பௌண்டரிகள் மூலம் பெற்ற 112 ஓட்டங்கள் என்ற தினேஷ் சந்திமாலின் சாதனையையே முறியடித்தார்.
இதன்போது வக்குனகொட 3 ஆவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் விமத் தன்சரவுடன் (52) இணைந்து 143 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். அதேபோன்று அவர் 4 ஆவது விக்கெட்டுக்கு கவிஜ கமகே (49) உடன் இணைந்து 128 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்மூலம் இலங்கை இளையோர் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது முதல் இன்னிங்ஸில் 89 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்றாகும்.




