500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக்

4 Min Read

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்தாக, 2026 லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் தொடக்க விழா கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அரங்கேறவுள்ளது. இத்தொடரின் உரிமத்தைப் பெற்றுள்ள ஐபிஜி நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 500 ட்ரோன்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான வான்வெளி ஒளிக்காட்சியைத் (Drone Show) தொடக்க விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில், போட்டி ஒன்றின் தொடக்க விழாவிற்காக பிரம்மாண்டமான நேரடிப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இம்முறை எல்பிஎல் தொடருக்கான நுழைவுச் சீட்டுகளை ஜூலை முதலாம் திகதி முதல் BookMyShow இணையதளம் அல்லது செயலி ஊடாகக் கொள்வனவு செய்ய முடியும். விறுவிறுப்பான டி20 கிரிக்கெட் போட்டியுடன், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இணைந்து, சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு திருவிழாவாக இந்தத் தொடக்க விழா அமையவுள்ளது. எனவே, கிரிக்கெட் இஇரசிகர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாவை நேரில் கண்டு ரசிக்க, தங்களது நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்தத் தொடக்க விழா, இலங்கையின் முதன்மை டி20 கிரிக்கெட் திருவிழாவாக விளங்கும் லங்கா பிறீமியர் லீக்கின் 6ஆவது அத்தியாயத்திற்கு, ஒரு பிரம்மாண்டமான ஆரம்பத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிரிக்கெட் இஇரசிகர்கள், குடும்பங்கள், அந்தந்த அணிகளின் ஆதரவாளர்கள், பொழுதுபோக்கு விரும்பிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் பார்ப்பவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து, இந்தத் தொடருக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க ஐபிஜி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரவு வானை அலங்கரிக்கவுள்ள 500 ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு பிரம்மாண்டமான காட்சி விருந்தாக அமையவுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் பெருமை, இத்தொடரில் பங்கேற்கும் அணிகள், டி20 கிரிக்கெட்டின் விறுவிறுப்பு மற்றும் ஆசிய பிராந்தியத்தில் ஒரு முக்கிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அங்கமாக உருவெடுத்து வரும் எல்பிஎல் தொடரின் அசாத்திய வளர்ச்சி ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்தர கிரிக்கெட் போட்டிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த பிற லீக் தொடர்களுக்கு நிகராக மைதான பொழுதுபோக்கு, ஒளிபரப்புத் தரம் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு மூலம் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதில் ஐபிஜி நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை இந்த முயற்சி காட்டுகிறது.

எல்பிஎல் தொடக்க விழாவின் திட்டங்கள் குறித்து ஐ.பி.ஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “எல்பிஎல் என்பது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல. அது ரசிகர்களுக்கு எப்போதும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு அனுபவத்தை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இம்முறை தொடரின் ஆற்றல், எதிர்கால இலக்குகள் மற்றும் வளர்ச்சியை மிகச்சரியாகக் காட்டும் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் 2026 எல்பிஎல் தொடரைத் தொடங்க நாம் எதிர்பார்க்கிறோம். 500 ட்ரோன்களின் வான்வெளி காட்சியுடன் சர்வதேச தரத்திலான பிரமாண்ட விளையாட்டு விழாவின் நேரடி உணர்வை வழங்கும் இந்தச் சிறப்பான தொடக்க விழாவைக் காண வருமாறு இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்,” என்றார்.

இந்தத் தொடக்க விழா, பாரம்பரிய கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமின்றி, பொழுதுபோக்கை விரும்பும் பரந்த பொதுமக்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“எல்பிஎல் தொடக்க விழாவை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வாக மாற்றுவதே எங்கள் நோக்கம். குடும்பங்கள், இளம் இரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் என அனைவரும் மைதானத்திற்கு வந்து, இந்தச் சூழலை ரசித்து, இலங்கை கிரிக்கெட்டைக் கொண்டாடும் ஒரு வரலாற்று இரவின் அங்கமாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எல்பிஎல் தொடரை ஒரு முழுமையான பொழுதுபோக்கு தளமாக உருவாக்குவதே இதன் நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.

இது குறித்து லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறும் முதலாவது எல்பிஎல் போட்டி இந்தத் தொடரின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். திட்டமிடப்பட்டுள்ள 500 ட்ரோன்களைக் கொண்ட காட்சி இந்தத் தொடக்க விழா இரவை ரசிகர்களுக்கு மேலும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றும். இத்தகைய அனுபவங்கள் அதிகமான மக்களை விளையாட்டிற்கு நெருக்கமாக கொண்டு வர உதவுகின்றன. கிரிக்கெட் ஆர்வலர்கள், குடும்பங்கள் மற்றும் இளம் இரசிகர்கள் இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்று, இந்த ஆண்டு எல்பிஎல் தொடரின் இந்த உற்சாகமான தொடக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

2026 எல்பிஎல் தொடரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, ஐந்து பலம் வாய்ந்த அணிகள் மோதும் விறுவிறுப்பான லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இத்தொடரில் முன்னணி இலங்கை வீரர்களுடன், சர்வதேச T 20 நட்சத்திரங்களும் களம் காண்கின்றனர். அணிகளுக்கு இடையேயான பலப்பரீட்சை மற்றும் அனல் பறக்கும் டி20 போட்டிகளுடன் அரங்கேறவிருக்கும் இத்தொடர், நாடு முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *