கட்டாரில் அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க ஈரான் தொடர்ந்து தயக்கம்

4 Min Read

கட்டார் வந்திருக்கும் அமெரிக்க தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானிய பிரதிநிதிகள் தயக்கம் காட்டி வருவது இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகனான ஜரட் குஷ்னர் மற்றும் டிரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொப் ஆகியோரின் தலைமையிலேயே அமெரிக்க தூதுக் குழு கடந்த செவ்வாக்கிழமை (30) கட்டாரை சென்றடைந்தது. எனினும் அவர்களுடன் மறைமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட அங்கு சென்றிருக்கும் ஈரானிய பிராதிநிதிகள் மறுத்துள்ளனர். இந்நிலையில் இரு தரப்பினரும் கட்டார் மத்தியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் கட்டார் சென்றிருக்கும் ஈரான் பிரதிநிதிகளின் மூத்த அதிகாரிகள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தககது.

ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளை அமெரிக்கா கடந்த வாரம் தாக்கியதை அடுத்து அதனுடனான பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டதாக ஈரான் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதோடு இதனையடுத்து குவைட் மற்றும் பஹ்ரைனில் இருக்கும் அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தெற்கு லெபனானில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ நடவடிக்கை தொடர்பிலும் ஈரான் கேள்வி எழுப்பி வருகிறது. புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிப்பது தொடர்பாகவும் சிக்கல் நிலவி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் அதிகாரத்தின் மிகப்பெரிய கருவியாக உள்ளது என வலியுறுத்தி இருக்கும் ஈரான் தலைமை பேச்சுவார்த்தையாளர் முஹமது பகர் கலிபப், புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் வரையில் இறுதி உடன்படிக்கை ஒன்று தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தியுள்ளார்.

‘நாங்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நடைமுறைக்கு வராவிட்டால், போருக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்; அதற்கேற்றவாறு பதிலளிப்போம்’ என்று ஈரானின் அரச தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கலிபப் கூறினார்.

மறுபுறம் அமெரிக்க அதிகாரிகள் வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைக்கு கூறியதாவது, ‘கடந்த சில நாட்களாக டொனால்ட் டிரம்ப் முழுமையான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல்வேறு விருப்பங்களை பரிசீலித்திருந்தார்.

எனினும், தற்போதைக்கு பேச்சுவார்த்தை பாதையையே தொடர முடிவு செய்துள்ளார்’ என்றனர்.

கடந்த ஜூலை 17 ஆம் திகதி எட்டப்பட்ட 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி நான்கு மாதங்கள் நீடித்த போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளை முன்னேடுக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றன.

எனினும் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய கடல்வழி பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக கட்டுப்படுத்த முயற்சிப்பது இரு தரப்புக்கும் இடையில் பதற்றத்தை அதிகரித்திருப்பதோடு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையின் மறுபுறத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் கூட்டாளியான ஓமானுடன் சேர்ந்து கடல் போக்குவரத்தை நிர்வகிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 60 நாள் கால அவகாசம் முடிவடையும் ஓகஸ்ட் நடுப்பகுதியில் இந்த நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் விதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். ‘ஹோர்முஸ் நீரிணையின் இறையாண்மை ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமானது. மேலும், அந்த நீரிணையில் இடம்பெறும் போக்குவரத்து, ஈரான் நிர்ணயிக்கும் ஏற்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கும்,’ என்று ஈரான் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலிபப் வலியுறுத்தினார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், சர்வதேச கடற்பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரானுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: ‘ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து ஈரான் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு இந்த விவகாரம் செல்லாது’ என்றார்.

இந்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் நேற்றைய வர்த்தகத்தில் அதிகரிப்பை காட்டியது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.69 வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 73.45 டொலர்கள் உயர்வை காட்டியது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து இந்த ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து இரண்டாவது காலாண்டுக்கிடையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 45 அமெரிக்க டொலர் அளவுக்கு சரிந்தது.

இது 2008 நிதி நெருக்கடியிலிருந்து காணப்பட்ட மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியாகும். அதேவேளை, அமெரிக்க மசகு எண்ணெய் எதிர்கால விலைகளும் சுமார் 31 டொலர் வரை குறைந்தன.

இது உலகளாவிய எண்ணெய் தேவையில் கொவிட்-19 பெரிதும் பாதித்த 2020 காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சியாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *