இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளமான UPI தனது 10 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் வருடாந்த பரிவர்த்தனை அளவு சுமார் 13,000 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2016–17 நிதியாண்டில் 1.78 கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025–26 நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதே காலப்பகுதியில் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.0.07 இலட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ.314 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 4,000 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
2016 ஆகஸ்ட் 25ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட UPI, இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. தற்போது இது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பாக விளங்குகிறது.
2026ஆம் ஆண்டில் UPI பயன்பாடு மேலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மே மாதத்தில் மாதாந்த பரிவர்த்தனைகள் முதன்முறையாக 2,300 கோடியை கடந்த நிலையில், ஜூலை மாதத்தில் 2,366 கோடி பரிவர்த்தனைகள்பதிவாகியுள்ளன. இது UPI வரலாற்றில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச பரிவர்த்தனை எண்ணிக்கையாகும்.
UPI அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் 21 வங்கிகள் இணைந்திருந்த நிலையில், தற்போது 741 வங்கிகள் UPI தளத்தில் இணைந்துள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் UPI-யின் பங்கு 84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், உலகளாவிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அளவில் இந்தியாவின் UPI சுமார் 49 சதவீத பங்கைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி தற்போது 11 நாடுகளில் UPI சேவை செயல்பாட்டில் உள்ளது.
சிறு வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் நேரடி பணப் பரிவர்த்தனையை வழங்குவதன் மூலம், UPI இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி உள்ளடக்கத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.




