சூடானிய துணை இராணுவப் படைகள் எல் பாஷர் நகரைக் கடந்தாண்டு கைப்பற்றும் நடவடிக்கையின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் இன அழிப்பையும் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று குற்றம் சாட்டியுள்ளது. டார்ஃபூர் மேற்குப் பகுதியில் உள்ள எல் பாஷர் நகரை கைப்பற்றுவதற்கான முற்றுகையுடன் கூடிய இராணுவ நடவடிக்கையின் போது, சூடான் இராணுவத்திற்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையில் கடந்தாண்டு கடும் மோதல் இடம்பெற்றது. இச்சமயம் விரைவு ஆதரவு படையினர் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த சபை நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, கட்டாய இடமாற்றம், சிறைவாசம், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை, பாலியல் அடிமைத்தனம், பிற வகையான பாலியல் வன்முறைகள், அடிமைப்படுத்துதல், இன அழிப்பு மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து துணை இராணுவப் படை உடனடியாக எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இது போன்ற குற்றச்சாட்டுக்களை இக்குழு மறுத்துள்ளது. சூடானில் இராணுவத்திற்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கிறது.
இந்த உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை தெரிந்ததே.
பி.பி.சி




