எம்பாப்பேவின் இரட்டை கோலால் பிரான்ஸ் ’16 அணிகளின்’ சுற்றில்

2 Min Read

கிலியன் எம்பாப்பேவின் இரட்டை கோலுடன் சுவீடனை வீழ்த்திய பிரான்ஸ் அணி பிஃபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியதோடு நோர்வே மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நியூ ஜெர்சியில் இலங்கை நேரப்படி நேற்று (01) அதிகாலை நடைபெற்ற போட்டியில் எம்பாப்பே மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் அவர் புகுத்திய கோல் மறுக்கப்பட்டபோதும் 45 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலினால் பிரான்ஸ் முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பாதியிலும் பிரான்ஸின் ஆக்கிரமிப்பு ஆட்டம் தொடர்ந்தது மைக்கல் ஒலிசா 53 ஆவது நிமிடத்தில் பிரான்ஸுக்கு மற்றொரு கோலை புகுத்தியதோடு அத்துடன் நிற்காத எம்பாப்பே 74 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்றார். இதன்மூலம் சுவீடனை 3–0 என பிரான்ஸினால் வீழ்த்த முடிந்தது.

இதன்போது எம்பாப்பே உலகக் கிண்ண நொக் அவுட் போட்டிகளில் அதிக கோல் பெற்றவராக சாதனை படைத்தார். அவர் நொக் அவுட் போட்டிகளில் மொத்தம் 10 கோல்களை பெற்றிருப்பதோடு இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களைப் பெற்றவர் வரிசையில் ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் இதுவரை தலா ஆறு கோல்களைப் பெற்று தங்கப் பாதணிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி 16 அணிகள் சுற்றில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05) பராகுவே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதில் பிரேசிலுடனான 16 அணிகள் சுற்றில் ஆடுவதற்கு நோர்வே அணி தெரிவாகியுள்ளது. ஆர்லிங்டனின் நடைபெற்ற ஐவரிகோஸ்ட் அணிக்கு எதிரான 32 அணிகள் சுற்றுப் போட்டியில் நோர்வே அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

குறிப்பாக நட்சத்திர வீரர் எர்லிங் ஹார்லண்ட் 86 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் நோர்வேயின் வெற்றி கோலாக இருந்தது. இதன்மூலம் ஹார்லண்ட் தொடர்ச்சியாக 13 சர்வதேச போட்டிகளில் நோர்வே சார்பில் கோல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் மற்றும் நோர்வே அணிகள் மோதும் 16 அணிகள் சுற்றுப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ளது.

இதேவேளை ஈக்வடோருக்கு எதிராக மெக்சிகோ சிட்டியில் நேற்று நடைபெற்ற 32 அணிகள் சுற்றுப் போட்டியில் மெக்சிகோ 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. சீரற்ற காலநிலையால் ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமான இந்தப் போட்டியின் மெக்சிகோ முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை பெற்று முன்னிலையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து அல்லது கொங்கோ அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *