இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு தரும் வௌ்ளம், மண்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகளில் நேபாளம் மற்றும் சீன மீட்புப் படையினர் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.
இப்பணியில் அவர்கள் சவால் மிக்க வானிலையையும் அதிகரித்து வரும் நீர் மட்டங்களையும் எதிர்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களில் உள்ள சுரங்கங்களுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு சுரங்களுக்குள் காற்றும் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லோக் பகதூர் சேத்ரி கூறுகையில், சுரங்கப்பாதை மீட்புப் பணிகள், டி.என்.ஏ பரிசோதனை, உடல்களைக் குளிரூட்டப்பட்ட நிலையில் சேமித்தல் மற்றும் சிதைந்த எச்சங்களை தடயவியல் ரீதியாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட சிறப்புத் துறைகளில் நேபாளத்திற்கு சர்வதேச உதவி தேவை என்று கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை, பனிப்பாறை, மணல் பாறை மற்றும் இடிபாடுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மலைப் பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் வழியாகப் பாய்ந்து பாரிய பேரழிவை ஏற்படுத்தியது. எனினும் இமயமலையின் கரடு முரடான பகுதிகளில் மீட்பு பணிகளில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி மழை பெய்து வருவதால் திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியாளர்களும் உயரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நேபாள வௌியுறவு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, இந்நிலச்சரிவு சமீப ஆண்டுகளில் தங்களுக்கு ஏற்பட்ட மிகக் கடுமையான எல்லை தாண்டிய பேரழிவு என்றும், மீட்புப் பணிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிரமமும் சிக்கலும் அதிகரித்துள்ளதாகக் கூறியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனம் கூறியுள்ளது.
ரொய்ட்டர்ஸ்




