நேபாளத்தின் திரிசூல் ஆற்றை ஒட்டிய சேற்று மண்ணினால் புதையுண்டு இருக்கும் பாரிய வலையமைப்பைக் கொண்ட சுரங்கப் பாதை ஒன்றில் 600இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்குண்டு இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அந்த மலைப் பகுதி வெடி வைத்து தகர்க்கப்பட்டு தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணியாளர்கள்; அவர்களைச் சென்றடைய கடுமையாகப் போராடி வருகின்றனர். உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கான முக்கியமான கால அவகாசம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் அச்சத்திற்கு மத்தியில், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைச்சரிவில் துளையிட்டு, பின்னர் சுரங்கத்திற்குள் காற்றைச் செலுத்தியுள்ளனர்.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது திரிசூலி ஆற்றின் கரையோர நீர்மின் திட்டத்தின் கீழ் 600க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களின் நிலை தெளிவாகத் தெரியவில்லை.
அன்புக்குரியவர்களை எப்படியும் பார்த்துவிடலாம் என்ற ஒரே நம்பிக்கையில் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
‘அவரை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். அவர் வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,’ என்று திட்டப் பணித்தளத்தில் காணாமல் போன 33 வயதான பொறியியலாளர் அவுரஸ் பண்டாரியின் மனைவி அனுஷிலா பண்டாரி கூறினார்.
நேபாளம் நீர் மின் திட்டத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. வெள்ளத்திற்கு முன் சுமார் 11 நீர் மின் திட்டங்களில் பல நிறைவடைந்தன, எஞ்சியவற்றில் வேலை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை மீட்புக் குழுவினர் ஒரு சுரங்கத்திற்குள் சென்றனர். ஆனால் உள்ளே யாரும் இருக்கவில்லை.
நேபாள – திபெத் எல்லையில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி தற்போது 1,010 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதில் 3,916 பேர் காணாமல் போயிருப்பதோடு இவர்களில் 592 வெளிநாட்டவர்கள் அடங்குவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் இந்த நீர் மின் சுரங்கப் பணியாளர்கள் என்று நம்பப்படுகிறது. இந்தத் தளங்களில் இருந்து 279 பேர் மீட்கப்பட்டதாக நேபாள பிரதமர் பாலேந்திரா ஷாஹ் கடந்த திங்களன்று குறிப்பிட்டிருந்தார்.
சீன, நேபாள இராணுவத்தினரைக் கொண்ட சர்வதேச குழு ஒன்று மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா, கொரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிபுணர்களும் அதில் இணைந்துள்ளனர். நேபாள வெள்ளத்தில் இதுவரை 11,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பொறியியலாளர் ஆர்னோல்ட் டிக்ஸ், நேபாள அதிகாரிகளுக்கு நிலத்தடியில் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகளில் தொலைதூரத்திலிருந்து உதவி செய்து வருகிறார். மீட்புப் பணியாளர்கள் சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடிக்க கடுமையாகப் போராடி வருவதாக அவர் தெரிவித்தார்.
‘அவற்றின் உண்மையான அடையாளமே காணாமல் போய்விட்டது – எல்லாமே முற்றிலும் காணாமல் போயுள்ளது. அந்தப் பகுதி நிலவின் மேற்பரப்பைப் போன்ற தோற்றத்தில் உள்ளது,’ என்று அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 900 உடல்களில் 4 வீதம் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக, நேபாள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் முதன்முதலில் தாக்கிய பகுதிகளிலிருந்து வெகு தொலைவில், ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சித்வான் மாவட்டத்தில், தற்காலிகமாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இமயமலை நாடான நேபாளத்தின் ஆறுகள், சுமார் 300 உயிரிழந்தவர்களின் உடல்களை ஆற்றங்கரைகளுக்கு அடித்துக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த தற்காலிக அடக்கங்கள் இடம்பெறுகின்றன.




