ஈரான் மீதான எண்ணெய் தடையை தளர்த்தியது அமெரிக்க லெபனானிலும் மோதல்கள் தணிவு

4 Min Read

ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 60 நாட்களுக்கு ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளது. பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையின் கீழ் லெபனானினும் மோதல் தணிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை தொடர்ந்து அந்த உடன்படிக்கையை குழப்பும் பல நிகழ்வுகள் இடம்பெற்றதற்கு மத்தியிலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்ததை அடுத்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்கியதோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானை தாக்குவது தொடர்பில் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் சுவிட்சர்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்பக் கட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்பட்டதாக மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் கட்டார் அறிவித்திருந்தன.

ஈரானின் தடைகளை 60 நாட்களுக்கு தளர்த்தும் அறிவிப்பை அமெரிக்க கருவூலம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. இதன்மூலம் அமெரிக்காவுக்கும், ஈரானின் எண்ணெய் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசன்ட், புரிந்துணர்வு உடன்படிக்கையின் பல நிபந்தனைகளிலும் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘ஈரான், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தங்கள் நாட்டுக்;குள் நுழைய அனுமதிப்பதற்கும், ஹோர்முஸ் நீரிணை வழியாக சுதந்திரமான மற்றும் திறந்த கப்பல் போக்குவரத்திற்கும் உறுதியளித்துள்ளது’ என்று அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘இந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஈரானிய எண்ணெயின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை அனுமதிக்கும் வகையில், கருவூலத் துறை 60 நாட்களுக்கு தற்காலிக பொது உரிமத்தை வழங்கியுள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமம் எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை வழங்கப்படுவதோடு அதில், ஈரானின் மசகு எண்ணெய், பெட்ரோ இரசாயன உற்பத்திகள் அல்லது பெட்ரோலிய உற்பத்திகள் உள்ளடங்குகின்றன.

இது ஈரானிய எண்ணெயை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. ஆனால் அமெரிக்கத் தடைகளின் கீழுள்ள வட கொரியா அல்லது கியூபா தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கும் இது அனுமதி வழங்கவில்லை.

இவ்வாறு தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் 3.5 வீதம் வீழ்ச்சி கண்டு பீப்பாய் ஒன்று 77.7 டொலர்களாக மேலும் சரிவை சந்தித்துள்ளது.

எனினும் அணு கண்காணிப்பாளர்கள் ஈரான் வர அனுமதித்ததாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது. சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேசிய வான்ஸ், சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் இன்றே ஆரம்பிக்கக் கூடும் என்று குறிப்பிட்டார்.

ஆனால் அணு கண்காணிப்பாளர்கள் குறித்து ஈரான், எந்த ஒரு புதிய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கடந்த 2025 இல் இடம்பெற்ற ஈரானின் 12 நாள் போர் காரணமாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான சில ஒத்துழைப்புகளை ஈரான் இடைநிறுத்தியதோடு அதன் முக்கிய அணு நிலைகளை கண்காணிப்பதையும் தடுத்தது. எவ்வாறாயினும், ஆய்வாளர்கள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து ஈரானுக்கு வருகை தந்தனர். அவர்களின் கடைசி வருகை கடந்த நவம்பரில் இடம்பெற்றது.

‘ஈரான் புதிய விதிகள் அல்லது கூடுதல் அனுமதிகளை வழங்காது. ஏற்கனவே பாராளுமன்றமும் தேசிய பாதுகாப்பு அமைப்பும் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே ஐக்கிய நாடுகளின் ஆய்வாளர்கள் செயல்பட முடியும்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாயி அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 2015 இல் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படியே நாட்டில் உள்ள அணு நிலைகளை காண்காணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் 2018 இல் டிரம்பின் முதல் தவணையின்போது இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியது. ‘அது ஒரு மோசமான உடன்படிக்கை’ என்று அப்போது டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதல் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் கடந்த மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்ததோடு தெற்கு லெபனானில் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து உக்கிர தாக்குதல்களையும் நடத்தி வந்தது.

இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்காத இஸ்ரேல், லெபனானில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறப்போவதில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை புதிய போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கியது. அதனைத் தொடர்ந்தும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்ததாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் லெபனானில் எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் பதிவாகவில்லை என்று ஐ.நா. பேச்சாளர் ஸ்டபனே டுஜரிக் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே கடந்த மார்ச் 2 ஆம் திகதி மோதல் ஆரம்பித்தது தொடக்கம் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெறாதது இதுவே முதல் முறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *