காசாவில் பலஸ்தீனியர்களுக்கு எதிராகத் தொடரும் படுகொலைகளின் ஒரு பகுதியே, சிறுவர்களை இஸ்ரேல் திட்டமிட்டுக் குறிவைப்பதாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசலம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனியப் பிரதேசம் மற்றும் இஸ்ரேல் தொடர்பான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணைக்குழு நேற்று வௌியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் காசா மீதான போர் ஆரம்பமானதில் இருந்து பலஸ்தீனிய சிறுவர்களுக்கு எதிராக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை இந்த விசாரணைக்குழு ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது, பலஸ்தீனியச் சிறுவர்களை இஸ்ரேல் திட்டமிட்டுக் குறிவைத்து கொலை செய்கின்றது. அதன் விளைவாக காசாவில் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மாத்திரமல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் போர்க்குற்றங்கள் இடம்பெறுகின்றன.
இப்போர் ஆரம்பமானதில் இருந்து காசாவில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதமானோர் சிறுவர்களாவர்.
இப்போரின் போது, பச்சிளங்குழந்தைகள் மற்றும் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் குறிவைக்கப்பட்டன. இது பலஸ்தீனியர்களின் இனப்பெருக்க எதிர்காலத்தையும், பச்சிளங்குழந்தைகளின் உயிர்வாழ்வையும் நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தியது. கருச்சிதைவுகள், பிறவிக் குறைபாடுகள் மற்றும் நீடித்த உடல் உளப் பாதிப்புகள் அதிகரிக்க இவை வழிவகுத்தன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஜசீரா




