போரை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதிக் கட்ட உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை ‘நம்பிக்கையூட்டும் முன்னேற்றத்துடன்’ நிறைவடைந்ததாக மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் கட்டார் அறிவித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் ஆரம்பக் கட்ட உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்ட நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஆரம்பமானது. இதன் தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் கட்டார் நேற்று (22) வெளியிட்ட கூட்டு அறிவிப்பில், ’60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான செயல்திட்ட வரைவு ஒன்றுக்கு ‘உயர்மட்டக் குழு’ இணங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
லெபனான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டது என ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யிது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு இணக்கம் ஏற்பட்டது. அதேபோன்று லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹோர்முஸ் நிரிணையை மீண்டும் திறக்கவும் இரு தரப்பும் இணங்கின.
இந்நிலையில் மத்தியஸ்தர்களின் கூட்டு அறிவிப்பில் கூறியதாவது, ‘ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் நோக்கத்துடன், சம்பவங்களையும் தவறான புரிதல்களையும் தவிர்க்க ஒரு ‘தொடர்பாடல் இணைப்பு’ உருவாக்கப்பட்டிருப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, மத்தியஸ்த நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா, ஈரான் மற்றும் லெபனான் ஆகியவற்றுக்கு இடையில் ‘மோதல் தவிர்ப்பு ஒருங்கிணைப்பு மையம்’ ஒன்றை அமைப்பதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்பட்டது தொடக்கம் லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்திருப்பதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களும் உக்கிரம் அடைந்துள்ளன. இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மோதலை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா புதிய போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தபோதும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு இதனையடுத்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதாக ஈரான் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
சுவிஸ் நகரான லுசேனேவில் பேச்சுவார்த்தை ஆரம்பித்த கடந்த ஞாயிறன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவு ஒன்றில், ‘லெபனானில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தங்களது (ஈரானின்) அதிக நிதி ஆதரவு பெறும் பிரதிநிதிக் குழுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு இல்லாவிட்டால் ‘ஈரான் கடுமையாக தாக்கப்படும்’ என்றும் எச்சரித்தார்.
இதற்கு பதில் அளித்த ஈரான் தலைமை பேச்சுவார்த்தையாளரான முஹமது பகர் கலிபஃப், ‘அவர்களின் மிரட்டல்களுக்கு ஏதேனும் தாக்கம் இருந்திருந்தால், இன்று அவர்கள் இந்த நெருக்கடியான நிலையில் இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லையா?… அவர்கள் எவ்வளவு பேசினாலும், நடவடிக்கை எடுப்பது நாங்கள்தான்’ என்றார்.
லெபனானில் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும்போது மோதல்கள் குறைந்தபோதும், வடக்கு இஸ்ரேலை பாதுகாப்பதற்கு தேவையான காலம் வரை இஸ்ரேலிய படைகள் லெபனானில் நிலைகொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
லெபனானின் ஆறு வீதமான நிலப் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேல் அங்கு சுமார் 602 சதுர கிலோமீற்றர் பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் உடன் வாபஸ் பெற வேண்டும் அல்லது 2000 ஆம் ஆண்டு நடந்தது போன்று அது அந்த நாட்டிலிருந்து நிபந்தனையற்ற முறையில் மீண்டும் வெளியேற வேண்டிய நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் குத்துஸ் படைத் தளபதி இஸ்மைல் கானி எச்சரித்துள்ளார்.
‘நீங்கள் தெற்கு லெபனானிலிருந்து தானாக வெளியேறாவிட்டால், 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அதே நிகழ்வு மீண்டும் நடைபெறும். அதே ஆண்டில் நீங்கள் வெட்ககரமான முறையில் இந்த நிலத்தை விட்டு தப்பிச் சென்றீர்கள். தேர்வு உங்கள் கையிலேயே உள்ளது’ என்று கானி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
லெபனானில் 22 ஆண்டுகள் ஆக்கிரமிப்பு நடத்திய இஸ்ரேலியப் படை தெற்கு லெபனானில் இருந்து 2000 ஆம் ஆண்டு வாபஸ் பெற்றதைக் குறிக்கும் வகையில் லெபனானில் ஒவ்வொரு ஆண்டும் மே 25 ஆம் திகதி விடுதலை தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லெபனான் விவகாரத்தை ஒட்டி ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்கியுள்ளது. இதனையடுத்து அந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தும் கடுமையாக குறைந்திருப்பதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் காண்பிக்கின்றன.
கடந்த ஞாயிறன்று இந்த நீரிணை வழியாக மொத்தம் 12 கப்பல்களே பயணித்துள்ளன. இது அதற்கு முந்திய தினத்தில் பயணித்தல் 35 கப்பல்களுடன் ஒப்பிடுகையில் கணிசமான வீழ்ச்சியாகும்.




