கட்டாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) பதப்படுத்தும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதோடு, 18 பேர் காணாமல் போயினர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ராஸ் லஃபான் கைத்தொழில் நகரில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், இவ்வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்ள கட்டாரின் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டனர்.
பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அந்நிலையத்தில் இருந்து எந்தக் கசிவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அந்த வளாகத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தோஹாவுக்கு வடக்கே சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ராஸ் லஃபான் கைத்தொழில் நகரம், உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆலையைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது.
அல் ஜசீரா




