மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தீர்க்கமான குழுநிலை போட்டியில் 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை மகளிர் அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
குழு 2 இல் ஆடும் இலங்கை அணி இதுவரை ஆடிய 3 போட்டியில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் 2 புள்ளிகளை பெற்று 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு எஞ்சிய இரு போட்டிகளில் வெற்றியீட்டுவது மாத்திரமன்றி மற்ற ஆட்டங்களும் தனக்கு சாதகமாக அமைய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்டலில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 19.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கே சுருண்டது. முதல் மூன்று விக்கெட்டுகளையும் வெறும் 9 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த இலங்கை அணிக்கு நிலக்ஷிகா சில்வா அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
கவிஷா தில்ஹாரியுடன் (21) அவர் 5 ஆவது விக்கெட்டுக்கு 35 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்துகொண்டபோதும் எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி வெறும் 41 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது.
பந்துவீச்சில் ஹேலி மத்தியூஸ் அதிகபட்சம் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த மேற்கிந்திய தீவுகள் வீராங்கனைகள் 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 99 ஓட்டங்களையும் எட்டினர். இலங்கை பந்துவீச்சாளர்கள் போதுமான நெருக்கடி கொடுத்தபோது சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க தவறியது பாதகமாக அமைந்தது.
குறிப்பாக கவிஷா டில்ஹாரி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதில் இலங்கை அணி 23 உதிரி ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததும் மேற்கிந்திய தீவுகள் இலக்கை எட்டுவதை இலகுவாக்கியது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஸ்டபானி டெய்லர் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணி அடுத்து நாளை (23) நான்காவது குழுநிலை போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.




