லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்குவதாக அறிவித்திருக்கும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நேற்று (21) ஆரம்பமானது.
லெபனானில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களை அமெரிக்காவுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறுவதாகக் கூறியே ஈரான் நேற்று முன்தினம் ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அறிவிப்பை வெளியிட்டது. எனினும் அந்த நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்துகள் இடம்பெறுவதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் நேற்றுக் காலை சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார். நேற்று மாலையிலேயே புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. இதற்கான ஈரான் தூதுக் குழுவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தை சென்றடைந்தனர்.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டொக்கில் இருக்கும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர், கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
எனினும் லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே தொடரும் மோதல்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தையில் லெபனான் விவகாரம் அதிக அவதானம் செலுத்தப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
‘சியோனிச அரசு லெபனானில் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து மீறி வருகிறது. இந்த விவகாரம் இன்றைய (நேற்று) பேச்சுவார்த்தைகளில் முக்கிய கலந்துரையாடல் தலைப்பாக இருக்கும்,’ என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான இர்னாவுக்கு நேற்று தெரிவித்திருந்தார்.
‘ஈரானின் முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சொத்துகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினையும், அதேபோன்று ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு தேவையான அனுமதிகளை வழங்குவது தொடர்பான விவாதங்களும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும்,’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக சுவிட்சர்லாந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதியிடம் லெபனான் மோதல் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘அங்கு நிலைமைகள் உண்மையில் மேம்பட்டு வருகின்றன, மேலும் சூழ்நிலைகள் சற்று மெல்லத் தணிந்து வருகின்றன’ என்றார்.
எவ்வாறாயினும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் கடந்த சனிக்கிழமை குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்திருப்பதாக அறிவித்து ஒரு நாளைக்குள்ளேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகள் மீது ஹிஸ்புல்லா 50 இற்கும் அதிகமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தெற்கு லெபனான் மற்றும் பகா பள்ளத்தாக்கின் பல இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இஸ்ரேலின் வான், ஆளில்லா விமானம், பீரங்கி தாக்குதல்களில் நபட்டியே மாவட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டு அண்டைய செய்தா பகுதியில 7 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லெபனானின் பரிச் சிறு நகரில் தாய், தந்தை மற்றும் இரு குழுந்தைகள் என ஒரே குடும்பத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மறுபுறம் கடந்த 48 மணி நேரத்தில் ஹிஸ்புல்லா போராளிகளின் தாக்குதல்களில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறுவதாக தெரிவித்தது.
போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாகக் கூறும் ஹிஸ்புல்லா ‘நிலங்களை கைப்பற்றி ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தும்’ இஸ்ரேலின் முயற்சிக்கு பதிலடி கொடுப்பதாக எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள அலி அல்-தாஹெர் மலைப் பகுதிக்குள் இஸ்ரேலிய படைகள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்றதாக அந்த அமைப்பு தெரிவித்தது. அதன் போராளிகள் அந்த படைகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் இஸ்ரேல் தாம் அறிவித்திருந்த செயற்பாட்டு எல்லைக்குள் மற்றும் அதற்கு வெளியேயும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அது கூறியது.
ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிகளில் இஸ்ரேலின் ‘சுதந்திரமான நடமாட்டம்’ அனுமதிக்கப்படாது என்று ஹிஸ்புல்லா மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். மேலும், இஸ்ரேலிய படைகள் லெபனானில் தொடர்ந்தும் இருக்கும் வரை எதிர்ப்புப் போராட்டம் நியாயமானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் கைச்சாத்தான புரிந்துணர்வு உடன்படிக்கையில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாகும் என்று ஈரான் புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது. இதனால் புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதாக ஈரான் அறிவித்தது.
இதனையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துகள் வழக்கம்போல் இடம்பெறுவதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் கடந்த சனிக்கிழமை ஐந்து கப்பல்களே பயணித்திருப்பதாகவும் பல கப்பல்களும் திரும்பிச் சென்றிருப்பதாகவும் கப்பல்கள் பயணத் தரவுகளை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




