வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் கால்பந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரியின் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட, இரு அணிகளும் மாகாண மட்டத்தில் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் (18) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட அணி சண்டிலிப்பாய் மானிப்பாய் மகளிர் கல்லூரியை 4–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக 11ஆவது தடவையாகவும் மாகாண சம்பியனாக தெரிவானது. இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜனாக் கல்லூரியின் யசோதரன் லயன்சிகா தெரிவானார்.
17 வயதுக்குட்பட்ட இறுதிப் போட்டியில் மகாஜனா அணி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இப்போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாக மாகாண சம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியது.




