இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடருக்கான இலங்கைக் ஏ குழாத்துக்கு விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல அழைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக இலங்கை அணியில் இடம்பெற தவறிவரும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக திக்வெல்ல இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்ற நிலையிலேயே ஏ அணி அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏ அணியில் சஹன் ஆரச்சிகே தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் திக்வெல்ல உப தலைவராக செயற்படவுள்ளார்.
இந்த முக்கோணத் தொடரை அடுத்து இந்திய ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை ஏ அணிக்கும் ஆரச்சிகே தலைவராகவும் திக்வெல்ல உப தலைவராகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 வயதான இடது கை அதிரடி துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல கடந்த காலங்களில் ஒழுக்காற்று விவகாரங்களில் சிக்கியதோடு 2021 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்கு போட்டித் தடை மற்றும் அபராதத்தையும் எதிர்கொண்டார். தொடர்ந்து 2024 இல் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கி இருந்தார். திக்வெல்ல இதுவரை இலங்கை அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளுடன் மொத்தம் 137 சர்வதேச போட்டிகளில் ஆடி இருந்தபோதும் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் இலங்கை அணியில் இடம்பெறத் தவறியுள்ளார்.
இந்த முக்கோண தொடரில் யாழ்ப்பாண பரியோவான் கல்லூரியில் இருந்து அறிமுகம் பெற்ற 19 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுலனும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய, ஆப்கான் ஏ அணிக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் 9–21 ஆம் திகதிகளில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்திய ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் போட்டிகளும் முறையே ஜூன் 25 மற்றும் ஜூலை 2 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை ஏ ஒருநாள் குழாம்: நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்ஃ வி.கா.), அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம (வி.கா.), சஹன் ஆரச்சிகே (தலைவர்), அஹன் விக்ரமசிங்க, சாமிக்க கருணாரத்ன, வனுஜ சஹன், விஜயகாந்த வியாஸ்காந்த், மொஹமட் ஷிராஸ், துலாஜ் சமுதித, விஷேன் ஹலம்பகே, ரவிந்து பெர்னாண்டோ, சாமிக்க குணசேகர, கருக்க சங்கேத், குகதாஸ் மாதுலன்.
இலங்கை ஏ நான்கு நாள் குழாம்: பவன்த வீரசிங்க, சொஹான் டி லிசேரா, நுவனிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, சஹன் ஆரச்சிகெ (தலைவர்), அஹன் விக்ரமசிங்க, நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), ரவிந்து பெர்னாண்டோ, கவிந்து பத்திரண, திலும் சதீர, மொஹமட் ஷிராஸ், சாமிக்க குணசேகர, கேஷர நுவன்த, துலாஜ் சமுதித, பிரவீன் மனீஷ, அசங்க மனோஜ்.



