மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி வெற்றி ஆரம்பம்

1 Min Read

அணித் தலைவராக குசல் மெண்டிஸின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் துஷ்மன்த சமீரவின் அபார பந்துவீச்சின் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்ற இந்தப் போட்டியில் பெத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிசங்க நிதானமாக ஆடி 103 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்றபோதும் குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களைப் குவித்தார்.

தொடர்ந்து மத்திய வரிசையில் சரித் அசலங்க பெற்ற 45 ஓட்டங்கள் மற்றும் ஜனித் லியனகே ஆட்டமிழக்காது 29 பந்துகளில் பெற்ற 44 ஓட்டங்களும் இலங்கை அணி சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க உதவியது. இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி இலக்கை நெருங்க முடியாமல் போனது. அந்த அணியின் தலைவர் ஷாய் ஹோப் மாத்திரம் அரைச்சதம் (56) ஒன்றை பெற்றார். இதனால் மேற்கிற்திய தீவுகள் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துஷ்மன்த சமர 10 ஓவர்களுக்கும் 67 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்படி சனத் ஜயசூரிய மற்றும் அஞ்சலோ மத்தியூஸுக்கு அடுத்து மேற்கிந்திய தீவுகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக சமீர பதிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இதே கிங்ஸ்டன் மைதானத்தில் இலங்கை நேரப்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *