ஈரான் மீது கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்கா தனது முதல் தாக்குதலை நடத்திய பின், ஈரானுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதலில் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதில் அமெரிக்கா தற்போது அதிக அவதானம் செலுத்தி வரும் நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஈரானின் லராக் தீவு மீது அமெக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈரான் ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தி இருந்தது.
அண்மைக் காலமாக தடைகள், முற்றுகைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மூலம் அதிகளவில் நடைபெற்று வந்த ஒரு மோதல், எவ்வளவு விரைவாக மீண்டும் இராணுவ நடவடிக்கையாக மாறக்கூடும் என்பதை இந்த பரஸ்பர தாக்குதல் எடுத்துக்காட்டியது. இரு தரப்பினரும் முழு அளவிலான போருக்குத் திரும்ப விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்குப் பதிலடி கொடுப்பது பற்றி எச்சரித்து வருகின்றன.
‘நாம் அவர்களை கடுமையாகத் தாக்கப் போகிறோம்’ என்று பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு டிரம்ப் குறிப்பிட்டார். ‘இதற்கு பதிலடி வழங்கப்படும்’ என்று அவர் கூறினார்.
எனினும் இந்த புதிய தாக்குதல் முழு அளவில் போருக்கு திரும்புவதாக அமையாது என்று டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். ஈரானை ‘தோல்வியுற்ற நாடாக’ குறிப்பிட்ட டிரம்ப், அதன் பொருளாதாரம் மற்றும் இராணுவம் மோசமாக சீர்குலைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ‘அதனால் நாங்கள் அவர்களைத் தாக்க மாட்டோம் என்று அர்த்தமல்ல. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார்.
இதன்போது ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்துவதை கைவிட்டு விட்டீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஈரான் ஏற்கனவே இராணுவ ரீதியில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வாறு செய்வதற்கு தேவையில்லை’ என்று டிரம்ப் பதில் அளித்தார்.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் இடம்பெற்ற இந்த பரஸ்பர தாக்குதல், ‘வரையறுக்கப்பட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மோதல்’ என்று ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்றார்.
இந்நிலையில் ஈரானையும் அதன் வர்த்தகக் கூட்டாளிகளையும் தண்டிக்கும் வகையில் வொஷிங்டன் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானிய எண்ணெயை வாங்கும் மூன்றாம் நாடுகளைப் பாதிக்கும் ‘இரண்டாம் நிலைத் தடைகளும்’ இதில் அடங்கும்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெஸன்ட் கூறுகையில், புதிய தடைகள் ஈரானின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், ஈரான் தற்போது ‘பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது’ என்றார்.
‘அவர்களின் பொருளாதார நிலை குறித்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,’ என்று வட கரோலினாவில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பெஸன்ட் கூறினார். ‘பொருளாதார ரீதியாக அவர்கள் பின்னடைந்து வருவதால், அதற்கு இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்’ என்றார்.
எவ்வாறாயினும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நீடிக்கும் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகளிலும் இதுவரை முன்னேற்றம் எட்டப்படவில்லை. குறிப்பாக சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் முக்கிய கடல்வழிப் பாதையான குறுகலான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கியுள்ளது.
இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து குறைவாகவே உள்ளதாக ஆரம்பக்கட்ட கப்பல் கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த முக்கியமான கடல்வழிப் பாதை வழியாக வெறும் ஐந்து கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இது கடந்த 10 நாட்களின் சராசரியான சுமார் 14 கப்பல்களைவிட மிகவும் குறைவாகும். மொத்தமாகப் பதிவான ஐந்து கப்பல்களில், நான்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைந்தன, ஒரு கப்பல் வெளியேறியது. கப்பல்களின் பயண சமிக்ஞை அணைக்கப்பட்ட நிலையில் நீரிணை வழியாகச் சென்ற கப்பல்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் நேற்று (01) மசகு எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற புதிய அச்சங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன.
இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.6 வீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 91.05 அமெரிக்க டொலராக இருந்தது. அதேவேளை, வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் மசகு எண்ணெய் விலை ஒரு வீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 86.59 அமெரிக்க டொலராக அதிகரித்தது.




