1400 இற்கும் மேற்பட்டோர் மாயம்; நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்பு

3 Min Read

காணாமல் போனோரில் 650 பேர் வெளிநாட்டினர்

அனர்த்தத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல

மீட்பு மற்றும் தேடுதல் பணியில் 5000 படையினர்

திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்திலும் திபெத்திலும் 1400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதோடு 332 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 650 இற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இத்திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள ஏனையவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். இவ்வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட திரிசூலி பகுதியின் சித்வான் மாவட்ட ஆற்றுப்பகுதியில் இருந்து 103 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மீட்கப்படும் அனைத்து உடல்களையும் மருத்துவமனைகளில் வைத்திருக்கக்கூடிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதால் மாவட்ட அதிகாரிகள் கூடாரங்களை அமைத்து வருவதாகவும், தங்கள் உறவினர்களின் பிரேதங்களைப் பெற வரும் குடும்பங்களிடம் அவற்றை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் சித்வான் மாவட்ட நிர்வாகி கணேஷ் ஆர்யல் கூறினார்.

ஆனால் அடையாளம் காண முடியாத உடல்கள் டி.என்.ஏ பரிசோதனைக்கு பின்னர் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான நுவாகோட்டின் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா வீதி வழியாக நேற்று பயணித்துள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த வௌ்ளத்தில் திபெத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆகும். இதில் 260 வெளிநாட்டினரும் அடங்குவர் என்றும் அந்த ஒளி பரப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

சுமார் 100 சீன பிரஜைகள் இவ்வெள்ள அனர்த்தத்தில் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

இதேவேளை காத்மாண்டுவை திபெத்தில் உள்ள லாசாவுடன் இணைக்கும் வீதியை இவ் வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. மலையேறுபவர்களும் யாத்திரிகர்களும் அதிகம் கூடும் நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகள் போக்குவரத்துக்குத் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசரகால நிவாரணப் பொருட்களை வழங்கவும் உயிர் பிழைத்தவர்களைத் தேடவும், நேபாள அதிகாரிகள் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிலநடுக்கம் காரணமா?

4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் அந்த மையம் பின்னர் விடுத்துள்ள அறிக்கையில், அருகிலுள்ள நில அதிர்வு நிலையங்கள், நீண்ட கால நில அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றை மேலதிக பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம், அந்நில அதிர்வு நிகழ்வு உண்மையில் ஒரு பனிப்பாறையினதும் கற்பாறையினதும் சரிவு என்றும், அங்கு எந்த நிலநடுக்கமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பனி, சேறு மற்றும் பாறைகளால் ஆன சுவர் மலையொன்று ஆற்றில் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து இத்திடீர் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை ஏற்படுத்தியது.

களத்தில் 5000 படையினர்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவும் வகையில், தரை மற்றும் வான்வழி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நேபாள அரசு 5000 இராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட திரிசூலியைச் சுற்றியுள்ள பகுதியில், காணாமல் போன 100 இந்தியப் பயணிகளும் 25 சீனத் தொழிலாளர்களும் மீட்புக் குழுக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நேபாள உள்துறை அமைச்சர் சுதன் குருங் கூறினார்.

இந்த திடீர் வெள்ளத்தில் நேபாளத்திலும் திபெத்திலும் காணாமல் போன வெளிநாட்டினர் 29 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 288 பேர், அமெரிக்கர்கள் 63 பேர், மலேசியர்கள் 55 பேர், அவுஸ்திரேலியர்கள் 34 பேர், பிரித்தானியர் 33 பேர் கனடா நாட்டினர் 25 பேர் ஆவர். என்றாலும் நேபாளம் நாட்டினர் எவ்வளவு பேர் காணாமல் போயுள்ளனர் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, திபெத்தில் சுமார் 200 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் அங்கிருந்து மீட்கப்படக் கோரி வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.

கைலாஷ் மலைக்கான புனித யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ், அல் ஜசீரா, பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *