நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் தாம் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகளுக்கு நேபாளத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சூறாவளியின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் நாடாக இலங்கை உள்ளது. நேபாள மக்களின் துயரத்தை இலங்கை மக்களும் பகிர்ந்துக்கொள்வதுடன், நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களுக்கு தமது சார்பிலும் இலங்கை சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார். இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள அந்நாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் அவசர உதவிகளுக்காக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. திபெத் பகுதியிலிருந்து ‘போதே கோஷி’ ஆற்றின் ஊடாக ராசுவா மாவட்டத்துக்குள் திடீர் வெள்ளம் புகுந்ததால் நேற்றுமுன்தினம் நேபாளத்தில் பாரிய பேரழிவு ஏற்பட்டது.
போதே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கீழ்நிலைப் பகுதிகள் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அந்த ஆற்றுப்பாதைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ராசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள இலங்கையர்கள், வெள்ள அபாயம் குறையும் வரை தங்களது பயணங்களை ஒத்திவைக்குமாறும் பாதை நிலைமைகள் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்ட பின்னரே பயணங்களை மேற்கொள்ளுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவி தேவைப்படும் இலங்கைப் பிரஜைகள், காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கமான +977 9851048653 ஊடாக தொடர்புகொள்ள முடியும். மேலும், slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




