மற்றுமொரு இராஜதந்திர முயற்சியாக ஈரானுக்கு விரைந்தார் கட்டார் பிரதமர்

3 Min Read

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து, ஈரானின் வர்த்தக நட்பு நாடுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தி இருக்கும் நிலையில் மற்றுமொரு இராஜதந்திர முயற்சியான கட்டார் பிரதமர் ஜசிம் அல்தானி நேற்று (27) ஈரான் பயணமானார்.

ஈரானின் வளைகுடா அண்டை நாடாகவும் அமெரிக்காவின் கூட்டணி நாடாகவும் இருக்கும் கட்டார், போர் தரப்புகளுக்கு இடையிலான அமைதி முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு கடந்த ஜூனில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்திற்கு நேரடி பங்கு வகித்திருந்தது.

ஆறு மாதங்களை எட்டும் இந்தப் போரில் நேரடி மோதல்கள் தணிந்திருந்தபோதும் இராஜதந்திர முயற்சிகள் வெற்றி அளிக்காத சூழலிலேயே கட்டார் பிரதமரின் விஜயம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதில் போட்டியிட்டு வரும் சூழலில் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. ஈரான் இந்த நீரிணையை பேரம் பேசும் கருவி ஒன்றாக பயன்படுத்தி வருகிறது.

ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே இருக்கும் இந்த குறுகிய நீர்வழிப் பாதை தொடர்பில் இருக்கும் முரண்பாடு காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையும் தற்போது முறிந்துள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் வெடிப்பதற்கு முன்னர் இந்த நீரிணை உலகில் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் விநியோகத்தில் பங்கு வகித்து வந்தது.

துப்பாக்கிச் சத்தம் பெரும்பாலும் ஓய்ந்திருப்பதோடு, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை, கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக ஈரான் மீது எந்தத் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஈரானின் வர்த்தகக் கூட்டாளிகளை பொருளாதாரத் தடைகள் மூலம் துண்டிக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளதன் மூலம், அமெரிக்கா பொருளாதார அழுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிகிறது.

எனினும் அமெரிக்கா தனது புதிய பொருளாதாரத் தடைகளால் எதனையும் சாதிக்கப்போவதில்லை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியா குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த கட்டத்தில் பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்க முடியாது. அதேபோன்று, போரிலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியவில்லை. இதுவரை நாம் செய்ததைப் போன்றே, பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் நாம் உறுதியாக நிற்போம் தொடர்ந்து அவ்வாறே செய்வோம்’ என்று பெசஷ்கியா கூறியதாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அண்மைய கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, கடந்த திங்கட்கிழமை ஒரு நாளுக்கு வெறும் 50 இலட்சம் பீப்பாய்கள் மட்டுமே இந்த நீரிணை வழியாகக் கடத்தப்பட்டுள்ளன. போருக்கு முன், இந்த நீரிணை வழியாக தினசரி சுமார் 2 கோடி பீப்பாய்கள் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டன. ஈரானும் ஓமானும் இந்த நீர்வழியை எவ்வாறு பகிர்ந்து பயன்படுத்துவது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் வருவாயை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து உடன்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிக் காவல்படை கடந்த புதன்கிழமை தெரிவித்தது. ஆனால், பின்னர் ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், இரு நாடுகளும் ஒப்பந்தத்தின் விபரங்களை இன்னும் இறுதி செய்து வருவதாக தெரிவித்தார்.இதனிடையே ஹோர்முஸ் நீரிணையில் ஒரு எண்ணெய்க் கப்பல் அடையாளம் தெரியாத எறிகணை அல்லது தாக்குதல் பொருளால் தாக்கப்பட்டு, அந்தக் கப்பலில் தீப்பற்றியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியது.

இந்நிலையில் கட்டார் பிரதமரின் விஜயத்தின்போது, அந்த நாடு மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அவசரம் காட்டப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘எனக்கு எந்த காலக்கெடுவும் இல்லை, எதுவுமே இல்லை. நான் அவசரப்படவில்லை. எனக்கு எந்த கால அட்டவணையும் இல்லை,’ என்று ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்காக எவ்வளவு கால அவகாசம் வழங்கப் போகிறீர்கள் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *