வளைகுடாவில் இருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளையும் முடக்க ஈரான் எச்சரிக்கை

3 Min Read

ஈரான் மற்றும் அதன் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராக இதுவரை இல்லாத பொருளாதார நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி இருக்கும் நிலையில், ‘பொருளாதாரப் போர் தொடர்ந்தால்’ வளைகுடாவில் இருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளும் முடக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை குறித்த அறிவிப்பு அமெரிக்க நேரப்படி நேற்று வெளியிடப்படவிருந்தது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்தைப்பை அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்கெட் பெசன்ட் நடத்தவிருந்தார். 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், கிட்டத்தட்ட தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு எதிராக, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வெளியிடுவதாக அளித்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.

‘விடியற்காலையில் ஒரு பொருளாதாரத்தின் தீர்மானகரமான தினம் ஆரம்பமாகிறது. எதிரி நாட்டுக்கு எதிராக இதுவரை திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதித் தாக்குதல் இதுவாகும்,’ என்று பெசென்ட், கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) பைனான்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியான கருத்துக் கட்டுரையில் எழுதி இருந்தார்.

கடந்த சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் இடம் பெறாததோடு ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் ஈரான் மற்றும் லெபனானைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் உட்பட அயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் போரினால் ஈரானிய இராணுவ திறனை பலவீனப்படுத்த முடிந்தபோதும் ஈரான் தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறனை தக்கவைத்திருப்பதோடு அது அண்டை வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் திறனை பெற்றிருக்கும் நிலையில் தீர்க்கமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கி எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா எச்சரித்து வரும் பொருளாதார தடையை எதிர்கொள்வதற்கு ஈரான் கடந்த  சில நாட்களாக தயாராகி வருகிறது. இதற்கு எதிரான கடுமையாக எச்சரிக்கைகளை விடுத்து வரும் ஈரான், பாரிய இராணுவ ரீதியாக பதிலடி ஒன்றை வழங்குவது தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் மொஹசன் ரெசாயி, பொருளாதார ரீதியான பதிலடி குறித்து கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டிருந்தார்.

‘பொருளாதாரப் போர் தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாகவோ அல்லது பாரசீக வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியிலிருந்தோ ஒரு துளி எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யப்படாது’ என்று ரெசாயி சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார். ‘ஈரான் மக்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரப் போரில் எந்தவொரு நாடும் பங்கேற்பதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ, ஈரான் ஒரு போர்ச் செயலாகக் கருதும்’ என்றார்.

பெசென்ட் முன்னதாகவே சீனா அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சீனா வரலாற்று ரீதியாக தனது எண்ணெய் இறக்குமதிகளில் பாதியை வளைகுடா பிராந்தியத்திலிருந்து பெற்றுவந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ‘தடைகளும் அழுத்தமும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது’ என்று கூறியதுடன், இராஜதந்திர வழிமுறையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சர்வதேச பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த ஈரானின் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அதன் உட்கட்டமைப்பின் சில பகுதிகள் அழிக்கப்பட்ட பின்னர் மேலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கச் செய்யும் என்ற அச்சுறுத்தல் அதிகாரித்துள்ளது.

கடந்த ஜூனில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தைகளும் ஸ்தம்பித்துள்ளன. பாகிஸ்தான், கட்டார் மற்றும் துருக்கிய நாடுகள் இராஜதந்திர முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றபோதும் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் நேற்று ஈரான் விஜய் மேற்கொண்டதோடு, ஓமான் வெளியுறவு அமைச்சர் செய்யித் பதிர் அல் புசைதி இன்று ஈரான் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஈரான் மற்றும் ஓமான் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருக்கும் நிலையில் வார இறுதியில் அதன் ஊடே 20இற்கு குறைவான கப்பல்களே பயணித்ததாக தரவுகள் காண்பித்துள்ளன. கடந்த சனிக்கிழமை பதின்மூன்று கப்பல்களும் ஞாயிறன்று வெறும் நான்கு கப்பல்களுமே பயணித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *