நடப்பு சம்பியனாக இலங்கை மகளிர் அணி டுபாய் பயணம்

2 Min Read

மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி நேற்று முன்தினம் (23) இரவு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் ஓகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தத் தொடரில் இலங்கையுடன் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. கடைசியாக 2024 இல் இலங்கையில் நடந்த மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டி கிண்ணத்தை வென்றிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து கூறியதாவது, ‘நடப்புச் சம்பியனாகவே இந்தத் தொடருக்காக நாம் செல்கிறோம். எனவே, முன்னரை விடவும் அனைவரின் அவதானமும் எமது பக்கம் இருக்கும். கழகங்களுக்கு இடையிலான ஐம்பது ஓவர் போட்டிகளில் ஆடிவிட்டே நாம் இந்தத் தொடருக்கு செல்கிறோம்.

இதனால் எமது பயிற்சிகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் நான் திருப்தி அடையவில்லை. ஏனென்றால் நாம் ஐம்பது ஓவர் போட்டியில் ஆடிவிட்டே செல்கிறோம். என்றாலும் விராங்கனைகள் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்கள்.

டுபாயில் பயிற்சி முகாம் சிலதுக்கு நாம் பங்கேற்கவிருக்கிறோம். எமது வழக்கமான பாணியில் ஆடவிருக்கிறோம். தொடரில் பங்கேற்றிருக்கும் எந்த அணியையும் நாம் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்றார்.

இந்தத் தொடரின் ஆரம்ப சுற்றில் இலங்கை மகளிர் அணி பி குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் ஆடுகின்றன.

இலங்கை குழாம்: சமரி அத்தபத்து (தலைவி), இமேஷா துலானி, சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம (உப தலைவி), கவீஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹசினி பெரேரா, கௌஷினி நுத்யாங்கனா (விக்கெட் காப்பாளர்), தெவ்மி விஹங்கா, சுகந்திகா திசாநாயக்க, சமுதி பிரபோதா, சேதனா விமுக்தி, காவ்யா காவிந்தி மற்றும் மிதாலி அயோத்யா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *