பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராகும் இலங்கை, 300 பில்லியன் டாலர் இலக்குடன் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,மேலும் இதுபற்றி தெரிவித்த அவர்;
பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத் திறனையும் சுய சிந்தனையையும் முடக்கியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்கு தீர்வு காணும் புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது. முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல், மின்சாரம் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன. தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க உணர்வுடன் சிக்கல்களுக்கு தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். 19-ஆம் நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது. AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும். திரும்பத் திரும்பச் செய்யப்படும் வழக்கமான பணிகளை AI எளிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும். இலங்கை இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக உருவெடுக்கும். அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.




