மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவை பாதிக்குமா?

2 Min Read

சவூதி அரேபியாஇளவரசர் முஹம்மது பின் சல்மான், துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகிய மூன்று நாடுகளும் மக்காவில் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தம், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைப்பதாக தோன்றுவதால் சீனாவிற்கு கிடைத்த வெற்றி என பார்க்கப்பட்டாலும், உண்மையில் இது சீனாவிற்கு ஒரு மறைமுக சவாலாகவும் பின்னடைவாகவும் அமைகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் மீதான நம்பிக்கை குறைந்ததால் உருவாகிய இந்த ஒப்பந்தம், “அமெரிக்க ஆதிக்கம் குறைகிறது” என்ற சீனாவின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.

சீனாவின் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியிலிருந்து விலகி, இஸ்லாமிய உலகின் அணுஆயுத பாதுகாப்பு தூணாக மாறுகிறது. இதன் மூலம் சவூதியின் நிதி உதவியால் பாகிஸ்தான் ஸ்திரத்தன்மை அடைவது சீனாவுக்கு தற்காலிக சாதம் என குறிப்பிடப்படுகிறது.

சீனா உலகளவில் “பலதுருவ ஆட்சிமுறையை” விரும்பினாலும், அந்த துருவங்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றே நினைத்தது.

ஆனால், இந்த ஒப்பந்தம் துருக்கியின் தொழில்நுட்பம், சவூதியின் நிதி, பாகிஸ்தானின் இராணுவப் படை மற்றும் அணுஆயுத பலம் ஆகியவற்றைக் கொண்ட, சீனா அல்லது அமெரிக்கா ஆகிய இரு வல்லரசுகளையும் சாராத ஒரு தன்னாட்சி பெற்ற “இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பை” உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் இதுவரை இராணுவ ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிக்கு சீனாவை மட்டுமே அதிகம் சார்ந்திருந்தது.

தற்போது சவூதியின் நிதியும், துருக்கியின் டுரோன்கள் மற்றும் போர் கட்டமைப்புகளும் கிடைப்பதால், பாகிஸ்தானுக்கு மாற்று வழிகள் உருவாகி உள்ளன. இது சீனாவுடனான பேரம் பேசும் திறனை பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும்.

மேலும், சவூதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது பாகிஸ்தான் அங்கு கவனம் செலுத்த வேண்டி வரும். இதனால் தெற்காசியாவில் பாகிஸ்தானின் கவனம் திசைமாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா தனது குறைந்த விலை இராணுவ ஆயுதங்களை சவூதி போன்ற வளைகுடா நாடுகளுக்கு விற்க முயற்சித்து வந்தது.

ஆனால், நேட்டோ தொழில்நுட்பம் மற்றும் போர்க்களத்தில் நிரூபிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களை வழங்கும் துருக்கி, சவூதியுடன் இணைந்து கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், சீனாவுக்கான ஆயுத சந்தை வாய்ப்பு கணிசமாக குறையும்.

சீனா சவூதிக்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் வகித்து வந்தது. ஆனால் இந்த சுன்னி முஸ்லிம் பாதுகாப்பு கூட்டணி அமைந்தது ஈரானுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும். இதனால் சீனா தனது ராஜதந்திர சமநிலையை இழக்கும் அபாயம் உள்ளது.

தனித்தனி நாடுகளாக இருந்த வரை, சீனாவுடனான நிதிச் சார்பு காரணமாக சின்ஜியாங் முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்த நாடுகள் அமைதி காத்தன. ஆனால், பொருளாதார மற்றும் ராணுவ சுயசார்பு கொண்ட ஒரு ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டணி உருவாகும்போது, எதிர்காலத்தில் சீனாவின் சின்ஜியாங் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பும் வலிமை அதற்கு கிடைக்கக்கூடும்.

சீனா எதிர்பார்த்த “அமெரிக்க சார்பற்ற உலகம்” உருவாகிவிட்டாலும், அது சீனா உருவாக்கிய அமைப்பாக இல்லை. மக்காவில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், சீனாவின் தலையீடோ அல்லது மேற்பார்வையோ இன்றி ஒரு சுதந்திரமான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. சீனா விரும்பிய பலதுருவ உலக அமைப்பில், சீனாவுக்கு பணியாத மற்றொரு புதிய துருவம் உருவாகியிருப்பதே இதன் சுருக்கமாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *