ஹோர்முஸ் நீரிணை குறித்து ஓமானுடன் ஈரான் உடன்பாடு

4 Min Read

ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்துக்கு ஓமானுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டி இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பான விபரங்களை வெளியிடாத நிலையில் அது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாயி தெரிவித்துள்ளார்.

எனினும் ஓமானுடனான இந்த உடன்படிக்கை மூலம் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் பகாயி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை இதில் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புத் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஓமான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெடித்த இந்த போர் ஆரம்பித்தது தொடக்கம் உலகில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட எரிவாயு கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி வருகிறது.

இந்த நீரிணையை திறக்காவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமையும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க மூத்த அதிகாரிகள், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த வார இறுதிக்குள் சரக்கு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவித்த நிலையிலேயே டிரம்ப் இவ்வாறு எச்சரித்திருந்தார். எனினும், ஈரான் தரப்பு தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது இந்த இரு நாடுகள் மற்றும் மத்தியஸ்தர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 12 கப்பல்கள் மாத்திரமே பயணித்திருப்பதாக கடல்சார் புலனாய்வு நிறுவனமான வின்ட்வேர்ட் கடந்த புதனன்று குறிப்பிட்டிருந்தது. அந்த நீர்வழியாக ஆறு உள்வரும் கப்பல்களும் ஆறு வெளியேறும் கப்பல்களும் மட்டுமே பயணித்ததாக அது தெரிவித்தது. இது, அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போருக்கு முன்னர் தினசரி சுமார் 140 கப்பல்கள் இந்த நீர்வழியை பயன்படுத்தியதை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

வின்ட்வேர்ட் நிறுவனம் தெரிவித்ததாவது, ஈரான் எதிர்க்கும் தெற்கு கடற்பாதை வழியாக மூன்று கப்பல்கள் ஒரே இரவில் பயணித்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் 12 மணி நேரத்திற்கு தங்களது கப்பல் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவைத்திருந்ததாகவும் கூறியது.

எவ்வாறாயினும் ஈரான், அமெரிக்கா இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பதோடு உடன்பாடு ஒன்றை எட்டும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் சூழலில் எண்ணெய் விலை நேற்று மீண்டும் குறைவை காண்பித்தது. நேற்றுக் காலை ஆசிய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 0.3 வீதம் குறைவடைந்து பீப்பாய் ஒன்று 79.24 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேவேளை, ஈரான் மற்றும் ஓமான் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களின் கட்டுப்பாட்டை ஈரானிடம் ஒப்படைக்கும் வகையில் அமைந்துள்ளதாக, ஒரு மூத்த ஈரான் அதிகாரியும் பிராந்தியத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் கடந்த புதன்கிழமை (05) ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். இது, ஈரானுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப் பெரிய சலுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க தரப்பினர் கூறியபோதும், ஈரான் கட்டுப்படுத்தும் வகையிலான எந்த ஒப்பந்தத்திற்கும் தாங்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா முன்னேற்றம் காணவில்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி ‘குழப்பமானதாக உள்ளது’ என்றும், ‘இதற்கு சில காலம் தேவைப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

பொக்ஸ் தொலைக்காட்சிக்கு கடந்த புதனன்று வழங்கிய நேர்காணலில் பேசிய வான்ஸ், ‘ஈரானியர்கள் மிகவும் கடினமான முறையில் அணுக வேண்டியவர்கள்’ என்று கூறினார். மேலும், போரைத் தீர்க்கும் முயற்சிகளில் சில நேரங்களில் முன்னேறுவதற்கு முன் பின்னோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட இரண்டு வார கால தாக்குதல் நடவடிக்கைகள் உட்பட, பல மாதங்களாக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ முயற்சிகளுக்கு மத்தியிலும், ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை தளர்த்த முடியாமல் போயுள்ளது.

இதில் அமெரிக்காவின் சில வகையான வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதக் கையிருப்புகள் குறைந்து வருவதாக அமெரிக்க இராணுவத் தளபதிகள், ஜனாதிபதி டிரம்பிடம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியை பயன்படுத்தி முடித்துவிட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *