ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ‘கடும்’ தாக்குதல்: குழந்தையுடன் பெற்றோர் பலி

4 Min Read

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி இருப்பதோடு பிராந்திய நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த மோதலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் எகிப்து துறைமுகத்திலும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ‘ஈரானுக்கு எதிரான கடுமையாக தாக்குதல் அலை ஒன்றை நடத்தியதாக’ அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது. குவஷிம் தீவில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் மீது அமெரிக்க நடத்திய குண்டு வீச்சில் ஒரு தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கிஷ் தீவிலும், புஷெஹ்ர் மாகாணத்திலும், மேலும் ஈரானின் எண்ணெய்த் தொழில்துறையின் மையமாகக் கருதப்படும் குஸெஸ்தான் மாகாணத்தின் நான்கு இடங்களிலும் வெடிப்புகள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோர்தனில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மீது ஈரான் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்திய நிலையில் ‘ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையிலேயே நேற்று இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

‘இது எமது முறை’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார். ‘ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்படுகிறதா என்பதை அமெரிக்கா கவனித்துப் பார்க்கும். ஆனால், அதுவரை நாங்கள் அவர்கள் மீது மிகக் கடுமையாகத் தாக்குதல் நடத்துவோம்’ என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட அறிப்பில், ‘ஈரான் புரட்சிக் காவல் படையின் இராணுவ கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள், மேலும் கடல்சார் செயல்திறன்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஈரானில் இருந்து வீசப்பட்ட ஐந்து ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்தான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் இராணுவ நிலையம் ஒன்றை இலக்கு வைத்ததாக ஈரான் புரட்சிக் காவல் படை குறிப்பிட்டிருந்த நிலையிலேயே புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மோதலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் எகிப்தின் மத்தியதரைக் கடல் துறைமுகமான டமியெட்டாவில் அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்பு டேங்கர் கப்பலை ட்ரோன் ஒன்று தாக்கியதாக, பிரிட்டனைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான அம்ப்ரே குறிப்பிட்டுள்ளது. எகிப்தின் பெட்ரோலிய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அந்தத் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால், ட்ரோன் தாக்குதல் குறித்து எந்தக் குறிப்பும் தெரிவிக்கவில்லை.

ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஈராக்கில் தாக்கியதற்கும் சிறிது நேரத்திற்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ட்ரோன் தாக்குதல் ‘எனர்கோ வின்டர்’ என்ற மிதக்கும் எரிவாயு சேமிப்பு டேங்கர் கப்பலைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்றொரு கப்பலுக்கும் பரவியதாக, இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மூன்று வர்த்தகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே இந்தப் போர் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவுக்கு இடையே புதிய மோதல் ஒன்றை உருவாக்கி இருப்பதோடு அமெரிக்கா மற்றும் சவூதி இணைந்து ஈராக் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல் போரின் புதிய முனை ஒன்றாக உருவெடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூனில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்ட நிலையில் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பான மோதலால் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் இரண்டு வாரங்கள் நீடித்தன. எவ்வாறாயினும் கடந்த வாரம் தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்து சில நாட்களிலேயே மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், அமெரிக்க கூட்டு இராணுவத் தலைமைப் பணியாளர்கள் குழுத் தலைவர் டான் கேன், ஆயுதக் கையிருப்பு நிலைமை ஈரானில் மேற்கொள்ளப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவொன்றின் அண்மைய ஆய்வின்படி, ஈரானுக்கு எதிரான சமீபத்திய போர், ஏற்கனவே குறைந்துள்ள அமெரிக்க இராணுவத்தின் பெட்ரொயிட் மற்றும் தாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளுக்கான கையிருப்பை மேலும் அதிகமாகக் குறைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோதல் தொடர்ந்தால் அது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் எண்ணெய் விலையிலும் தளம்பல் ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை கடந்த புதனன்று சுமார் 8 வீதம் வரை உயர்ந்த பின்னர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஆசிய வர்த்தக நேரத்தில் அது சிறிதளவு சரிவைச் சந்தித்தது. இதன்படி பிரெண்ட் எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 1.29 டொலர் குறைந்து 89.45 டொலராக இருந்தது. அதே நேரத்தில், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 0.66 வீதம் குறைந்து 83.90 டொலராக பதிவானது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *