ஒருங்கிணைப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் வலுப்படுத்துதல், பதற்றத்தைத் தணித்தல் என்பன குறித்து பிராந்திய நாடுகளான எகிப்து, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் ஜோர்தான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற கூட்டமொன்றைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், எகிப்தின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டி, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடன் ஆகியோருடன் இப்பேச்சுவார்த்தையை சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின் போது, ஹொர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டாப் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பேணுதல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி சந்தைகளின் நிலைத்தன்மைக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்கு கூட்டு முயற்சிகளின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும் சர்வதேச நீர்வழிகளைப் பாதுகாக்கவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் பன்னாட்டு கடல்சார் பாதுகாப்பு கூட்டணியொன்றை நிறுவவென சவுதி அரேபியா முன்னெடுக்கும் முயற்சிகளை பிராந்திய நாடுகளின் அமைச்சர்கள் இச்சமயம் பாராட்டியுள்ளனர். அரப் நியூஸ்




