ஹோர்முஸை திறக்க ஈரானுடன் விரைவில் உடன்படிக்கைக்கு அமெரிக்கா நம்பிக்கை

4 Min Read

ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று எட்டப்படவிருப்பதாகவும் அது இன்று அல்லது நளைக்கு இடம்பெறக் கூடும் என்றும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து உலகின் முக்கிய கடல்வழி பாதை ஊடாக எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கும் நம்பிக்கைக்கு மத்தியில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்கொட் பெசன்ட் சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அடுத்து வரும் மணி நேரங்களில் நாம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

கடந்த திங்களன்று வெள்ளை மாளிகையில் வைத்து பேசிய டிரம்ப், ஈரானுடனான இராஜதந்திர முயற்சி தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டதோடு, இது அழிவுக்கு முன்னர் ஈரானுக்கு வழக்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் எச்சரித்திருந்தார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய எதிர்பாரா தாக்குதல் தொடக்கம் போர் நீடித்து வருகிறது. இதில் போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் எட்டப்பட்டபோதும் அதற்கு மத்தியிலும் பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையற்ற மற்றும் பதற்றமான சூழ்நிலையை எடுத்துக்காட்டும் வகையில், ஹோர்முஸ் நீரிணையில் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான ஒரு வணிகக் கப்பலின் பணியாளர் ஒருவர் காணாமல்போயுள்ளார். அதேவேளை, செங்கடலில் அடையாளம் காணப்படாத தாக்குதலுக்கு பின்னர் ஒரு இந்தியக் கப்பல் மூழ்கியுள்ளது.

உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ள ஹோர்முஸ் நீரிணை, புதிதாக மோதல் தீவிரம் அடைவதற்கு காரணமாகியுள்ளது.

ஈரான், அந்த நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுங்கக் கட்டணங்களை வசூலிக்க திட்டமிட்டு வருகிறது. போருக்கு முன் ஈரான் இதுபோன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது உருவாகியுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டிரம்ப் கையாண்டு வரும் வழக்கமான ஒரு போக்காக, கடந்த வாரம் ஈரானை ‘மிகக் கடுமையாகத் தாக்குவோம்’ என்று எச்சரித்தார். அதில் பொதுமக்கள் பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறித்து குறிப்பிட்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் அந்த நடவடிக்கையிலிருந்து பின்வாங்கி, ஒரு ஒப்பந்தம் நெருங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

ஈரானுடன்; பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், ஈரானின் வெளியுறவு அமைச்சு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்தது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்தை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஓமான் மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நீரிணையை திறக்கும் நம்பிக்கைக்கு மத்தியில் பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை 6 வீத வீழ்ச்சி கண்டு பீப்பாய் ஒன்று 79.00 டொலர்களாக குறைந்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் கட்டார், இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தது. ஆனால் ஈரான்–அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் கூறியது.

கட்டாரின் தலைவர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் டிரம்புடன் உரையாடினார். இந்த உரையாடலில் ‘பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகள்’ குறித்து கலந்துரையாடப்பட்டதாக கட்டார் கூறியது.

டிரம்ப் இதற்கு முன், பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் ‘ஒரு வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ’தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், ‘இது மிகவும் சிக்கலான விடயம் அல்ல’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் இராஜதந்திர இலக்குகளில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடச் செய்வது (அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவது) ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைக்கு ‘சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம்’ என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்காவுக்கு பல பில்லியன் டொலர்கள் செலவை ஏற்படுத்தியுள்ள இந்தப் போர் ஆரம்பித்து ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், ஈரான் இன்னும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் இலக்குகள் மீதும், அதேபோன்ஞ வணிகக் கப்பல் போக்குவரத்து மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவக்கூடிய திறனைத் தொடர்ந்து கொண்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பாதைகளின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளன. அங்கு, ஈரான் ஆதரவு பெற்ற யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல் முற்றுகையை அறிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் செங்கடல் துறைமுகமான யன்பு, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் தவிர்த்து, உலக சந்தைகளுக்கான தனது ஏற்றுமதிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவியுள்ளது. ஆனால், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது கடல் முற்றுகையை அறிவித்ததிலிருந்து, அதை மீறியதாகக் கூறப்படும் பல கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, இந்தியக் கப்பலான எம்.எஸ்.வி. பயிஸ் நூர் ஒலியா, யெமன் கடற்கரைக்கு அருகிலுள்ள செங்கடல் பகுதியில் அடையாளம் காணப்படாத தாக்குதலைத் தொடர்ந்து மூழ்கியது. எனினும், அந்தக் கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் மீட்கப்பட்டனர். செங்கடல், சுயெஸ் கால்வாய்க்கான நுழைவாயிலாக உள்ளது. காசா போரின் போது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய முந்தைய தொடர் தாக்குதல்கள் காரணமாக, கப்பல் நிறுவனங்கள் அதற்கு பதிலாக ஆபிரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றிச் செல்லும் நீண்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *