ஈட்டி எறிதல் இறுதி சுற்றுக்கு முன்னேறிய தரங்க பதக்கத்திற்காக இன்று போட்டி

2 Min Read

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் முதல் இடத்தை வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க இன்று (31) நடைபெறும் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

பதினெட்டு வீரர்களுடன் நேற்று நடைபெற்ற ஆரம்பச் சுற்று போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே 82.84 மீற்றர் தூரத்தை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ததோடு அடுத்த இரு முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவை அவருக்கு ஏற்படவில்லை.

எனினும் இலங்கை சார்பில் பங்கேற்ற மற்றொரு ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க தனது மூன்று முயற்சிகளிலும் தவறிழைத்ததை அடுத்து இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். இன்று நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு மொத்தம் 12 வீரர்கள் தகுதி பெற்றிருப்பதோடு இவர்களில் நடப்புச் சம்பியன் மற்றும் ஒலிம்பிக் சம்பியனான அர்ஷாட் நதீம் 78.63 மீற்றர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கான தகுதியை உறுதி செய்தார். இதில் நதீம் தனது மூன்று முயற்சிகளையும் பயன்படுத்தியதோடு அதில் இரண்டாவது முயற்சியில் தவறிழைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீராஜ் சொப்ராவும் 79.61 மீற்றர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். சொப்ரா இரண்டாவது முயற்சியிலேயே இந்த இலக்கை எட்டி இருந்தார். அண்மைக் காலமாக சர்வதேச போட்டிகளில் சோபித்து வரும் தரங்க, சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசையில் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சிறந்த சாதனையாக 92.62 மீற்றர் தூரம் எறிந்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்த ஆண்டில் பதிவான சிறந்த சாதனையாகவும் இது உள்ளது. இந்நிலையில் அவர் இன்று பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்;ப்பு உள்ளது. 1998 இல் ஷிரியானி குலவன்ஷ 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் பொதுநலவாக தடகளப் போட்டி ஒன்றில் இலங்கை வீரர் ஒருவர் இதுவரை பதக்கம் ஒன்றை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்ப சுற்றில் இலங்கை சார்பில் பங்கேற்ற அருண தர்ஷய 20.96 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து நான்காவது இடத்தை பிடித்ததோடு, மற்றொரு ஆரம்ப சுற்றில் பங்கேற்ற மலித் தமெல் 20.99 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பெற்றார். என்றபோதும் இந்த இருவரும் அடுத்து சுற்றுக்கு முன்னேறத் தவறினர்.

அதேபோன்று நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற அசித்த தரங்க போட்டியை 53.04 விநாடிகளில் நிறைவு செய்து 06 ஆவது இடத்தைப் பெற்றார். இந்த ஆரம்ப சுற்றில் பங்கேற்ற மற்றொரு வீரரான அயோமால் அகலங்க 50.27 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். என்றபோதும் இந்த இருவரும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற த்தவறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *