குத்துச்சண்டை வீராங்கனை நதீஷாவுக்கு பதக்க வாய்ப்பு

2 Min Read

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 51 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையின் நதீஷா புஷ்பகுமாரி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 16 வீராங்கனைகள் சுற்றில் ஸ்கொட்லாந்தின் புரூக் நீரியை எதிர்கொண்ட அவர் 3–2 என வெற்றியீட்டியே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்படி அவர் அரையிறுதியில் இன்று (29) நமீபியாவின் மிஸ்சா மொனிக் அரேஸை எதிர்கொள்ளவுள்ளார். இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் பதக்கம் ஒன்றை வெல்வது உறுதியாகிவிடும்.

எனினும் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ரொஷான் தம்மிக்க பதக்கம்; வெல்லும் வாய்ப்பை இழந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் போட்டித் தூரத்தை 14.05 விநாடிகளில் நிறைவு செய்து ஏழாவது இடத்தையே பெற்றார்.

ஜமைக்காவின் டி பிரின்ஸ் போட்டித் தூரத்தை 13.17 விநாடிகளில் நிறைவு செய்து தக்கப் பதக்கத்தை வென்றதோடு இங்கிலாந்தின் எஸ். பென்னட் (13.30 விநாடிகள்) மற்றும் சைப்ரஸின் எம். டிரன்ஜ்கொவின் (13.32 விநாடி) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்பச் சுற்றில் இலங்கை சர்பில் பங்கேற்ற சந்தருவர் கருணாரத்ன 5 ஆவது இடத்தையே பிடித்தார். போட்டித் தூரத்தை 1.49.98 நிமிடங்களில் நிறைவு செய்த அவர் அடுத்த சுற்றுக்காண வாய்ப்பை இழந்தார்.

மறுபுறம் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்கேற்ற தரிந்து தசுன் காயத்தால் வெளியேறி பதக்க வாய்ப்பை இழந்தார். முதல் முயற்சியிலேயே அவர் 2.05 மீற்றர் உயரம் பாய்ந்தபோதும் உபாதையால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இந்தப் போட்டியில் ஜமைக்காவின் ரொமைனே பெக்போர்ட் 2.25 மீற்றர் பாய்ந்து தங்கம் வென்றார்.

இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷ்ரோ வெள்ளிப் பதக்கத்தையும் கிம்னி ஜக் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பட்டர்பிளை நீச்சம் போட்டியில் 2ஆவது ஆரம்ப சுற்றில் பங்கேற்ற இலங்கையின் மொஹமட் பித்யான் 25.25 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து முதல் இடத்தை வென்றதோடு தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார். எவ்வாறாயினும் அவர் ஒட்டுமொத்த போட்டி முடிவில் 37 ஆவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *