பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி தொடரை 2–1 என கைப்பற்றியது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் தொடக்கம் நெருக்கடி கொடுக்க இலங்கை மகளிரால் முடிந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கே சுருண்டது. அணித் தலைவி பாத்திமா சானா மத்திய பின்வரிசையில் அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்போது சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, சேதனா விமுக்தி மற்றும் கிவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர் அணி எந்த நெருக்கடியும் இன்றி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. சமரி அத்தபத்துவுடன் (52), ஹர்ஷிதா சமரவிக்ரமா (ஆட்டமிழக்காது 72) மற்றும் ஹசினி பெரேரா (ஆட்டமிழக்காது 50) அரைச் சதம் பெற்றனர்.
சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரி ஆட்டநாயகியாக தெரிவான நிலையில் தொடர் நாயகி விருது ஹர்ஷிதாவுக்கு கிடைத்தது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மகளிர் அணி அடுத்து இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.




