விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமவின் அபார சதத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணிக்கு மத்திய வரிசையில் சித்ரா அமின் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அந்த அணி 50 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர் அணி 20 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஷ்மி மற்றும் ஹர்ஷிதா 203 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்போது ஆரம்ப வீராங்கனை விஷ்மி 123 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 123 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் ஹர்ஷிதா 119 பந்துகளில் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை குவித்தார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இரு அணிகளுக்கும் இடையே நாளை (28) ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.




