அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் 10 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தர்கள் பரிந்துரைத்திருப்பதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மாதம் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டபோதும் தற்போதும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. தொடர்ந்து 10 ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு பதிலுக்கு பிராந்திய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாக்கும் வகையிலும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்பை உருவாக்கும் வகையிலுமே மத்தியஸ்தர்கள் 10 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
மத்தியஸ்தர்கள் அண்மையில் ஈரானுக்கு புதிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டுவரும் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதை காண்பிப்பதாக உள்ளது. எனினும் இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மறுபுறம் ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமனி ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மத்தியஸ்த நாடான பாகிஸ்தானுக்கு பயணித்திருப்பதாக பாகிஸ்தான் அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க மத்திய கட்டளையகம் கடந்த திங்கட்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு வரும் ஈரானின் இராணுவத் திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தது. இதன்போது ‘ஈரானின் இராணுவக் கட்டளை மையங்கள், கடல்சார் இராணுவத் திறன்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள், மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளை’ தாக்கியதாக அது தெரிவித்தது. சிரிக், பந்தர் அப்பாஸ், கேஷ்ம் தீவு, சாபஹார் மற்றும் கோனாரக் பகுதிகளுக்கு அருகே வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் அப்தனான் புறநகர் பகுதியில் சிவில் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அந்த நகர ஆளுநர் பஹ்சாத் நூர் முஹமதி, இர்னா செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை வெளியிட்ட அறிக்கையில், குவைட் மீது பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது. அந்தத் தாக்குதல்களில், அமெரிக்காவின் ஹிமர்ஸ் ஏவுகணை அமைப்புகள், ரேடார் நிலையங்கள், செயற்கைக்கோள் சமிக்ஞை பெறும் கருவிகள், தொலைத்தொடர்பு மையம் மற்றும் எம்.கியூ-9 ட்ரோன்களுக்கான ஹேங்கர் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஹ்ரைனில் அமெரிக்காவின் ஒரு ரேடார் நிலையத்தையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்ததாகவும் அந்தப் படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அதேபோன்று ஓமானின் லிமா துறைமுக நகரக் கடற்கரைக்கு அருகே மேலும் ஒரு எண்ணெய் டேங்கர் தாக்கப்பட்டதால், அதன் பணியாளர்கள் கப்பலைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு குறிப்பிட்டது.
இந்நிலையில் ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பற்ற தெற்குப் பாதை வழியாகச் செல்ல முயன்ற’ மேலும் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களில் வெடிப்புகள் ஏற்பட்டதுடன், அவற்றில் பெருமளவிலான தீ விபத்தும் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமே தற்போது மோதல் தீவிரம் அடைவதற்கு காரணமாகி உள்ளது. தீர்க்கமான எண்ணெய் விநியோக கடல் பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்கி இருப்பது எரிபொருள் நெருக்கடியை அதிகரித்திருப்பதோடு எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் யெமனில் ஆட்சியில் உள்ள ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடல்வழி முற்றுகை ஒன்றை அறிவித்திருப்பது இந்த மோதலை மற்றொரு முனைக்கு விரிவுபடுத்துவதாக பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய கடல் வழித்தடமாக இருக்கும் பாப் எல்-மண்டெப் நீரிணையை முடக்குவது தொடர்பிலேயே ஹூத்திக்கள் எச்சரித்துள்ளனர்.
யேமனில் செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டணி, ஒரு அறிக்கையில், இதற்கு வலுவான பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பாப் எல்-மண்டெப் நீரிணை வழியாகச் செல்லும் தனது கப்பல்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்த ஆரம்பித்திருப்பதாக சவூதி குறிப்பிட்டுள்ளது. ஹுத்திகள் மற்றும் சவூதிக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலே பதற்றத்தை அதிகரிப்பதற்கு காரணமாகும்.
அமெரிக்கா தொடர்ந்து ஈரானின் மின்சக்தி உட்கட்டமைப்புகளை தாக்கினால், செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் எல்-மண்டெப் நீரிணையை மூடுமாறு ஹூத்தி அமைப்பை ஈரான் வலியுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரிணையும் முழுமையாக முடக்கப்பட்டால் சர்வதேச எண்ணெய் விநியோகம் 7 வீதம் குறைவதோடு, சவூதி அரேபியாவின் பெரும்பான்மையான எண்ணெய் ஏற்றுமதியை பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முடியாத நிலை ஏற்படும். இந்த இடையூறு, வளைகுடா பகுதியில் நடைபெறும் போரினால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான எண்ணெய் விநியோகக் குறைப்பை மேலும் அதிகரிக்கும்.




