காசாவில் இஸ்ரேல் நேற்று முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் ஒரு தந்தை, அவரது மனைவி மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் என ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளதோடு அவர்களது வீடும் தீக்கிரையானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மருத்துவர்கள் மேலும் கூறுகையில், சப்ரா பகுதியில் உள்ள அக்குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ஃபிராஸ் அல்-மஸ்ரி என்ற நபரும், அவரது மனைவி சல்சபீலும், அவர்களது மூன்று மகள்களும் ஒரு மகனும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறினர்.
இத்தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அந்நபர் ஒரு ஹமாஸ் தீவிரவாதி என்றும், தாக்குதலின் விளைவுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
கடந்த ஒக்டோபர் முதல் காசாவில் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கின்ற போதிலும் இஸ்ரேல் இவ்வாறு அடிக்கடி தாக்குதல்களை முன்னெடுப்பது தெரிந்ததே.
ரொய்ட்டர்ஸ்




